kamal confirmed his political entry among his fans
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துவந்த கமல், அரசியலுக்கு வந்து முதல்வராகும் ஆசை இருப்பதாக கூறியிருந்தார்.
அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களின் மீதான விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வந்தார். கமல், டுவிட்டரில் மட்டும்தான் அரசியல் செய்வார் என அமைச்சர்கள் விமர்சித்தனர். ஆனால் மக்கள் பிரச்னைக்காக களத்திலும் இறங்குவேன் என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய கமல், அப்பகுதியில் நேரிலும் பார்வையிட்டார்.
இதையடுத்து கடந்த 4-ம் தேதி விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
இவையெல்லாம் கமல் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் சமிக்ஞைகளாக பார்க்கப்பட்டன.
இந்நிலையில், கமலின் ரசிகர் நற்பணி மன்ற 39-வது ஆண்டுவிழா சென்னை புறநகர்ப் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய கமல், கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவது உறுதி என ரசிகர்களிடம் தெரிவித்தார். கட்சி தொடங்குவதற்கு பணம் தேவை என சொல்கிறார்கள். நான் கட்சி தொடங்கி நடத்துவதற்கான பணத்தை என் ரசிகர்கள் நினைத்தால், கொடுத்துவிடுவார்கள். எனவே எனக்கு பணம் குறித்த பயமில்லை. இது வெறும் ஆரம்ப கூட்டம்தான். இதுபோல இன்னும் 50 கூட்டங்கள் நடத்த வேண்டும்.
அரசியல் கட்சி தொடங்குவதன் முதல்பணி தான் செல்போன் செயலி. செயலியின் பெயரும் செயல்முறை விளக்கமும் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியிடப்படும். கட்சிக்காக ரசிகர்கள் தரும் பணம் குறித்த விவரங்களை கணக்கு வைக்க செயலி பயன்படுத்தப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்டெடுக்க முயற்சிப்பேனே தவிர சுவிஸ் வங்கியில் பணத்தை போடமாட்டேன்.
இவ்வாறு கமல் பேசினார். கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவேன் என உறுதியாகக் கூறி, அவரின் அரசியல் பிரவேசம் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திவிட்டார்.
இதையடுத்து கமலின் ரசிகர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.
