என்னுடைய பிறந்த நாளுக்காக ரசிகர்கள், தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம் வயது பெண் மரணமடைந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு அரசியல் கட்சிகள் இனி பேனர் வைக்கமாட்டோம் என அறிவித்தன. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் நீதிமன்றத்திலேயே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன. சுபஸ்ரீ மரணத்தைக் கடுமையாக கண்டித்திருந்தார் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். 
இந்நிலையில் நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பரமக்குடிக்கு வரும் கமல், அங்கே தனது தந்தையின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இந்த வருகையின்போது, தனக்காக யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்டுள்ளத அறிக்கையில், “நாளை என்னுடைய பிறந்தநாள். அன்றைய தினம் பரமக்குடியில், என் தந்தை சீனிவாசனின் சிலையைத் திறக்க உள்ளேன். அப்போது என்னை வரவேற்கும் வகையில் தொண்டர்கள், ரசிகர்கள் யாரும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கொடிகள் எதுவும் வைக்க வேண்டாம். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் எந்தக் காரணங்களும் ஏற்கப்படாது என்பதை கண்டிப்பாகச் சொல்லிக் கொள்கிறேன். இனி நிகழவுள்ள அரசியல் மற்றும் ஆட்சி முறையில் மக்கள் நீதி மையம் கட்சி ஏற்படுத்த உள்ள மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.” என்று தெரிவித்துள்ளார்.