ஆளும் அ.தி.மு.க. அணிக்கு எதிராகத்தான் தாறுமாறாக முறுக்கிக் கொண்டு அரசியல் களமிறங்கினார் கமல்ஹாசன். ஆனால்  வந்த பின் என்னவோ அவரது சீற்றமெல்லாம் தி.மு.க.வுக்கு எதிராகத்தான் இருக்கிறது. அதிலும், ஸ்டாலினை முடிந்த மட்டுக்கும் சீண்டிக் கொண்டே இருக்கிறார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் துவங்கும் முன்பே மாநிலமெங்கும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்தார் ஸ்டாலின். கிராமசபை கூட்டம்! என அறிவிக்கப்பட்ட இந்த ஜமக்காள அரசியலுக்கு ஒரு அதிர்வு இருந்தது. இந்நிலையில் ‘கிராம சபை அரசியலை துவங்கியதே நாங்கள்தான். எங்களைப் பார்த்து காப்பியடித்துள்ளது தி.மு.க.’ என்று கமல் சீறினார், உடனே கடந்த 2016-ல் நமக்கு நாமே நடந்தபோதே இப்படி கிராமங்களில் ஜமக்காள அரசியலை தாங்கள் செய்ததை போட்டோ, வீடியோவுடன் நிரூபித்து ‘நாங்களே இதன் முன்னோடி’ என்றது தி.மு.க. உடனே மெளனியானார் உலகநாயகன் 

சரி அத்தோடு ஸ்டாலினோடு உரசலை முடித்தார் என்று பார்த்தால், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பிரசார நாட்களின் இறுதியில் ம.நீ.ம. சார்பாக ஒரு விளம்பரம் வெளியானது. இதில் நடித்திருந்த கமல், டி.வி.யில் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சைப் பார்த்து  கோப்த்தில் பொங்கி, டி.வி.யை உடைத்துவிடுவது போல் காட்சி. அந்த விளம்பரத்தில் டி.வி.யில் வரும் முதல் குரல் ஸ்டாலினுடையது. அதைப் பார்த்துதான் கமல் கடுப்பாக துவங்குவது போல் காட்சி வரும். ஆக இங்கும் சீண்டினார் ஸ்டாலினை. 

இப்போது நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஸ்டாலினை மீண்டும் சீண்ட துவங்கியிருக்கிறார் கமல். ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்துக்காக கடந்த 3-ம் தேதி சிலுவைப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய கமல் “கிராம பஞ்சாயத்துக் கூட்டத்தின் பலத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது மக்கள் நீதி மய்யம்தான்.” அழுத்தமாக கூறியுள்ளார். 

இப்படி விடாது மக்கள் மத்தியில் தன்னையும், தன் கட்சியையும் கமல் வம்பிக்கிழுப்பது ஸ்டாலினை ஏகத்துக்கும் கடுப்பாக்கி இருக்கிறது. வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. சில வாரங்களுக்கு முன் கமலுக்கு எதிராக பொங்கி அறிக்கை விட்டது போல் மீண்டும் கமல் கன்னாபின்னாவென தி.மு.க.வால் குதறப்படலாம்! அதைத்தான் கமலும் விரும்புகிறார்! என்கிறார்கள். 

ஆம், பெரிய மனுஷன் நம்மை நேரடியாக எதிர்த்தால் நாமும் பெரிய மனுஷன் தானே!