கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைகிறது! அவர்களுக்கு இரண்டு சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன!... என்று கடந்த சில நாட்களாக ஒரு தகவல் தடதடத்தது. இது கமல்ஹாசனின் காதுகளுக்கும் போனது, அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரது கட்சி நிர்வாகிகள் சிலர், ‘காலங்காலமா ஊழலில் ஊறுன திராவிட கட்சிகளுக்கு மாற்று!ன்னு சொல்லிட்டுதானே கட்சி துவக்குனோம். இப்போ தி.மு.க.வுடன் கூட்டுன்னா என்ன அர்த்தம்? விஜயகாந்த் மாதிரிதான் நாமும், அவரை மாதிரியே காணாமல் போகப்போறோம்.’ என்று பொங்கினர். 

இதுவும் கமல்ஹாசன் காதுகளுக்குப் போக, உடனே ‘கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நான் அரசியலுக்கு வந்த காரணத்தை உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர்! மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது! உந்தப்பட்டால் தனித்தே நிற்போம். நாளை நமதே!’ என்று ட்விட்டரில் ஒரு ஸ்டேட்மெண்டை தட்டிவிட்டார்.  

இத்தோடு இந்த விமர்சனங்களுக்கு ஒரு முடிவு உருவாகிவிட்டது! என்று நம்பினார் கமல். ஆனால் அதன் பிறகு துவங்கியது எதிர் நிலை விமர்சனம். அதாவது கமலை, மோடியின் ‘பி டீம்’ என்று வர்ணித்து விமர்சனங்கள் எழ துவங்கியுள்ளன இப்படி... “ரஜினியை போல் கமல்ஹாசனும் மோடியால் அரசியலுக்குள் தள்ளப்பட்டவர். ஆன்மிக பிரியரான ரஜினி அதேவழியில் அரசியலையும், பகுத்தறிவாளர் என தன்னை காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் நாத்திக வழியில் அரசியலையும் செய்திட மோடியால் பணிக்கப்பட்டவர்கள். ரஜினியை போலவே கமலும் மோடியின் ‘பி டீம்’தான் என்று துவக்கத்திலேயே சொன்னோம்! அது இப்போது மீண்டும் கமல் வாயாலேயே நிரூபணமாகியுள்ளது. 

தி.மு.க.வுடன் கூட்டணி! என்று தன் கட்சி குறித்து கிளம்பியிருக்கும் விமர்சனத்துக்கு, ‘வதந்திகளை நம்பாதீர்!’ என்று பாய்ந்திருக்கிறார் கமல். அத்தோடு நில்லாமல், ‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது.’ என்று சொல்லி, தன்னை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க நினைக்கும் தி.மு.க.வுக்கு மூக்கறுப்பும் கொடுத்துள்ளார். 

இந்த பாய்ச்சலின்  மூலம், ‘ஜெயலலிதாவின் மரணத்தால், பொது வாக்காளர்களின் வாக்குகளும், அ.தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகளும் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்கு சென்றுவிடுவதை தடுக்கவே ரஜினி, கமல் என இருவரையும் மோடி களமிறக்கியுள்ளார். அ.தி.மு.க.வில் உள்ள ஆன்மிக பிரியர்களின் ஓட்டு ரஜினிக்கு வரும், மோடி கூட்டணியில் ரஜினி இருக்கப்போவதன் மூலம் அது பி.ஜே.பி.க்கே சாதகம். பொது மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள நாத்திக வாக்குகள் கமலுக்கும் வந்து சேரும்.

இதன் மூலம் ஸ்டாலினுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் சிதறும், தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகும்! இதுதான் மோடியின் பிளான். அதற்கு சப்போர்ட் செய்யும் ரஜினி, கமல் இருவரும் அவரது பி டீமினரே! இதைத்தானே அன்றே சொன்னோம்.’ என்கிறார்கள். உலக நாயகனின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?