சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனால் 2 நாள் பிரசாரத்தை ரத்து செய்த கமல், இன்று மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார். 

அப்போது அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். 

தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள் தீவிரமாகத்தான் பேசுவோம். தீவிர ரசிகர்கள் உள்ள நான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளேன். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதால் என்னுடைய கொள்கைகளை கையில் எடுக்காதீர்கள் என்றார். முழுமையாக செய்தி வெளியிடாவிட்டால் பத்திரிகையாளர்கள் மீதும் வழக்கு தொடர்வேன் என்று கமல் கூறியுள்ளார். எந்த மதத்தையும் நான் சுதந்திரமாக விமர்சிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு ஊடகமும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் என் மீது கோபம் கொள்பவர்கள் ஹேராம் திரைப்படத்தை பாருங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.