தெளியத் தெளிய வைத்து டி.டி.வியை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். செந்தில் பாலாஜியை தொடர்ந்து  தங்க.தமிழ்செல்வன் திமுகவுக்கு தாவ நாள் குறித்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்றொரு ஆதரவு எம்.எல்.ஏவான பிரபு முதல்வரைச் சந்திக்கப் போவதாக பதில் கூறி அதகளம் செய்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பிரபு. கள்ளக்குறிச்சி தொகுதிக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனையடுத்து டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்தார். அவர் அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். தினகரன் அணிக்கு இவர் தாவினாலும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.

 

இந்நிலையில் தினகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த செந்தில்பாலாஜி திடீரென திமுகவில் ஐக்கியமானார். இதனையடுத்து தினகரன் கூடாரத்தில் இருந்து அடுத்த விக்கெட் பிரபு என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அவர் முதல்வர் எடப்பாடி சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாகவும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய திட்டமா? என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு   ’’உண்மை தான்..!மக்கள் முதல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களைத்தான் சந்திக்கப்போகிறேன்’’ என அதகளமாக பதிலளித்த அவர், ’’இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

 

நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உண்மையான விசுவாசியாகவும், தொண்டனாகவும் செயலாற்றுவேன். அணி மாறப்போவதாக வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் எப்போது ஆகிறார்களோ அப்போது தான் அ.தி.மு.க.வும்- அ.ம.மு.க.வும் இணையும்’’ எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளை வைத்துள்ளார்.