மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்
திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக தேர்தல் பிரச்சாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசலில், பரப்புரையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’’நாடாளுமன்ற தேர்தலின்போது, பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? முதல்வர் ஆகிவிடலாம் என்ற, திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது. அதிமுக ஆட்சி தொடரவே மக்கள் விரும்புகின்றனர்.
ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தயாரா? அதிமுகவை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தவர்களின் கனவு பளிக்கவில்லை. மு.க. ஸ்டாலின் மீது மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை. அதன் காரணமாகவே, அவர் உயிருடன் இருந்தவரை ஸ்டாலினுக்கு பதவி வழங்கவில்லை. மு.க,. ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறமை இல்லை. திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்’’ என அவர் தெரிவித்தார்.
