கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 
அதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை  அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் தலைவர் கருணாநிதி. நேற்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரத்திற்கு பின் தான் அவருடைய உடல் நலத்தினைப் பற்றி கூறமுடியும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் கூறிய 24  மணி நேரம் முடிவதற்கு 20  நிமிடங்கள் முன்பாகவே அவருடைய உயிர் பிரிந்தது.
அதனால் தமிழகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

அரசியல் நிலைபாட்டின் காரணமாக அவரின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்த ஒப்பற்ற தலைவர்களில் கலைஞர் கருணாநிதி முக்கியமானவர். இத்தனை நாள் அவரின் உடல் நிலை பற்றிய அறிய விரும்பாத மனிதர்களையும் கண்ணீர் விட வைத்த மனிதர் கருணாநிதியாகவே இருக்க முடியும்.

இனிமேல் இதுபோன்ற ஒரு தலைவன் தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் கிடைப்பது கடினமென்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.