முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த 7 ம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். பல்வேறு பிரச்சைனைகளுக்கு நடுவே அவருடைய உடல் மெரினாவில் அறிஞர் அண்ணாவின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.

அவர் இறந்து ஒரு வார காலம் ஆகிய நிலையில், அவருடைய சமாதிக்கு ஒவ்வொரு நாளும் மக்களும், பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதி ஒவ்வொரு நாளிற்கு ஒருமுறையென பூக்களாலும், பழங்களாலும் அவருடைய சமாதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.  பல்வேறு அமைப்புகள் தினந்தோறும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் அவருடைய வரலாறு குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் விவாத்தித்தும், பகிர்ந்தும் வருகின்றனர். அவர் பயன்படுத்திய உடைகள், உடைமைகள், புத்தகங்கள் என பலவற்றை குறித்த பேச்சுகள் சமூக வலை தளங்கள் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. 

அவர் இறந்த அடுத்த நாள் அவர் பயன்படுத்திய நாற்காலியின் புகைப்படமே தமிழக மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. கடந்த சில வருடங்களாகவே கலைஞர் கருணாநிதி அந்த நாற்காலியில் அமர்ந்து தான் தன்னுடைய பொன்னான நாட்களை கழித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவர் பயன்படுத்தியதால் கலைஞர் அவர்களின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போனது அந்த நாற்காலி. எப்படி ஒரு கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் கலைஞரின் அடையாளமாக இருந்ததோ! அதை போலவே அவரை சுமந்து, அவர் இறந்த பிறகு ஒரு ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த நாற்காலியும் அந்த அந்தஸ்தை அடைந்து அவருடைய அடையாளமாக மாறிப்போனது.

இவ்வாறு ஒரு மாபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மரியாதை உள்ள நேரத்தில், அவர் உயிர் பிரிந்து அவருடைய பூத உடலை ஒரு நாள் முழுவதும் தாங்கி நின்ற சாய்வு பெட்டி, ராஜாஜி ஹாலில் கேட்பாரற்று ஒரு ஓரத்தில் தூக்கி வைக்கப்பட்டிருந்தது. பொருட்களுக்கு உயிர் இல்லை தான், ஆனால், அந்த மனிதரின் உடலை சுமந்த பெட்டி என்று யாரிடமாவது கூறிப்பாருங்கள். நிச்சயம் அவர்கள் அந்த பெட்டியின் அருகே சில மணித்துளிகளை செலவழித்து தான் செல்வார்கள்.

ஆகஸ்ட் 8 அன்று, எத்தனையோ கோடி மக்கள் அந்த பெட்டியை தொட்டு விடமுடியாத?, சிறிது நேரம் அந்த பெட்டியின் அருகே நின்று விட முடியாத என்று சிந்தித்திருப்பார்கள். எத்தனையோ தலைவர்களின் கைகள் அந்த பெட்டியின் மீது பட்டிருக்கும் அல்லவா! 
அன்றைய தினத்தில் ஒரு ஆளுமையை சுமந்து மதிப்புமிக்க இடத்தில இருந்த அந்த சாய்வு பெட்டி, ஏதோ ஓரிடத்தில் தூக்கி வீச பட்டிருப்பதை பார்க்க சற்றே மனதிற்கு பாரமாக இருக்கின்றது.

அந்த பெட்டி சாதாரண பெட்டியல்ல, ஒரு வரலாற்றினை சுமந்த பெட்டி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.