காடுவெட்டி குரு உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்ல அவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட ஜெகத்ரட்சகன் தான் கொடுத்தார் என்ற டுவிட்டர் பதிவுகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

காடுவெட்டி குரு உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்ல அவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட ஜெகத்ரட்சகன் தான் கொடுத்தார் என்ற டுவிட்டர் பதிவுகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

பாமகவின் முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. 2018ம் ஆண்டு மே 25ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். கட்சியில் அனல் கக்கும் இவரது பேச்சுக்கு என்றுமே தனி கூட்டம் உண்டு.

நுரையீரலில் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை அளித்தும் கை கொடுக்காமல் அவர் காலனிடம் சென்றார். அவரது மறைவு கட்சிக்கும், வன்னிய சமூகத்துக்கும் பெரும் இழப்பாக கருதப்பட்டது.

அவர் மறைந்த தருணத்தில் பல்வேறு செய்திகள் வலம் வந்தன. பாமக தலைமை அவரை காப்பாற்ற தவறிவிட்டதாகவும், அவரது மறைவில் பாமகவின் பங்கு அதிகம் என்றும் கூறப்பட்டது. இதே குற்றச்சாட்டை குருவின் குடும்பத்தினரும் முன் வைத்தனர். வடமாவட்டங்களில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. பேருந்துகள் உடைக்கப்பட்டன.

காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல… பாமக தலைமையே அவரது மரணத்துக்கு காரணம் என்று குருவின் குடும்பத்தினர் கூறி வந்தனர். பெரும் பரபரப்பையும், வன்னிய சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகவும் பார்க்கப்பட்ட இந்த விவகாரம் சில காலங்களுக்கு பின்னர் வழக்கமான பிரச்னையாகி மாறி… அப்படியே மறக்கடிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜெய்பீம் சர்ச்சையில் அவரது மகன் கனலரசன் அளித்து வரும் பல்வேறு பேட்டிகள் இணைய உலகத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா வீட்டு முன்னாடி 5 துப்பாக்கி வைத்திருக்கும் போலீசாரால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னியர்கள் வந்தால் நிலைமை என்னவாகும் என்று அவர் பேசிய வீடியோ வைரலானது.

அதே சமயம் பாமகவால் தமக்கும், தமது குடும்பத்துக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கனலரசன் காவல்துறை உதவியை நாடிய சமாச்சாரங்களையும் இணையத்தில் பிய்த்து போட்டு நெட்டிசன்கள் கனலரசனின் பேச்சை பஸ்பமாக்கி வருகின்றனர்.

நிலைமைகள் இப்படி இருக்க…. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசிய வீடியோ ஒன்று இப்போது திமுக மற்றும் அதன் அபிமானிகள், ஆதரவாளர்கள் மற்றும் பாமக எதிர்ப்பாளர்களினால் டுவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ 2019ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியான வீடியோ ஆகும். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்த காலம். விக்கிரவாண்டியில் திமுக பிரச்சாரக்கூட்டத்தில் அக்கட்சி எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் வீடியோ தான் அது.

அந்த வீடியோவில் ஜெகத்ரட்சகன் பேசியிருப்பதாவது: பாமகவை வளர்த்தெடுத்தவர் காடுவெட்டி குரு. அவர் மருத்துவமனையில் இறந்தவுடன் அவரது உடலை எடுத்து வர 3 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அந்த தொகையை நான் தான் கொடுக்கிறது. அப்போது ராமதாஸ் எந்த உதவியும் செய்யவில்லை.

குருவின் குடும்பம் பணமின்றி தவிக்கிறது. நடுரோட்டில் பிச்சை எடுக்கிறது. குருவின் தாய், சகோதரி கண்ணீர்விட்டு அழுகிறார். 21 குடும்பம் நடுரோட்டில் பிச்சை எடுக்கிறது. இட ஒதுக்கீட்டுக்காக உயிர்துறந்த அந்த குடும்பங்கள் தத்தளிக்கின்றன. அவர்களுக்கு ஏதேனும் ராமதாஸ் செய்திருக்கிறாரா? வன்னிய சமுதாயத்துக்கு அவர் என்ன செய்திருக்கிறார் என்று பேசியிருக்கிறார்.

இப்போது ஜெய்பீம் படத்தில் வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று வீர முழக்கம் இடும் ராமதாஸ் ஜெகத்ரட்சகன் நான் தான் 3 லட்சம் ரூபாய் கொடுத்தேன் என்று கூறும் போது எங்கே போனார் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ஆனால் 28 லட்சம் ரூபாய் மருத்துவ பில்லை கட்டியது பாமகதான், ஜெகத் சும்மா தரவில்லை என்ற பதிலடி பதிவுகளும் வெளியாகி உள்ளது.

வன்னிய சொந்தங்களுக்காக கடைசி வரை பாடுபட்ட காடுவெட்டியார் மறைவு விவாகரத்தில் ஜெகத்ரட்சகன் கூறும் விஷயத்துக்கு அவரது மகன் காடுவெட்டியார் மகன் பதில் சொல்வாரா என்றும் கேள்விகளை தொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜெகத்ரட்சகன் பேசிய வீடியோவையும் சிலர் தனியாக வெளியிட்டு அதிர வைத்துள்ளனர்.

சொந்த சமுதாயத்தினரால் உயிருக்கு ஆபத்து என்று கதறிய காடுவெட்டியார் மகன் இப்போது என்ன பதில் சொல்வார் என்று திமுக உ.பி.க்களும், சூர்யா ரசிகர்களும் கேள்வி எழுப்பி ஷாக் தந்து இருக்கின்றனர்.