Asianet News TamilAsianet News Tamil

ஏதாவது பேசணும்னு பேசும் வீரமணி... தஞ்சாவூரில் சொன்ன பேய் கதை!! பொதுமக்கள் அதிர்ச்சி...

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மட்டுமல்ல. கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கும்கூட நீட்டைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என கி.வீரமணி தஞ்சையில் சொன்ன பகீர் தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

K veeramani speech about Neet
Author
Tanjavur, First Published Jun 17, 2019, 1:02 PM IST

தமிழகத்தில் இந்தி மொழி, சமஸ்கிருத மொழித் திணிப்புகள், நீட் நுழைவுத் தேர்வுத் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு ஆகிய வற்றைக் கண்டித்து  தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில்; மிகுந்த எழுச்சியோடு, மிகக்குறுகிய காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடுமையான கோடை, வெப்பம் இவைகள் தாக்கிக்கொண்டிருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகளுடைய வெப்பம் அதைவிட அதிகமாக இருக்கிறது. அதை எப்படியாவது    நாம் விரட்ட வேண்டும், அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் நீட் தேர்வைத் தமிழகத்தைப் பொருத்தவரையில் ரத்து செய்ய வேண்டும், அதேபோல, திணிக்கப்படக்கூடிய புதிய கல்விக்கொள்கை என்ற பெயராலே, காவி, ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது, கல்விக் கண்களையே குத்தக்கூடிய அளவிற்கு குலக்கல்வித் திட்டம் மீண்டும் வந்தால், எப்படி நம்முடைய வளர்ச்சி பாதிக்கப்படுமோ, அதே போன்ற ஆபத்து ஆட்சிக்கு வந்த உடனே ஒரு 10 நாள்களுக்குள்கூட ஆகவில்லை, உடன டியாக அவர்கள் தயாராக வைத்துள்ள குண்டுகளை வெடிப்பதைப்போல, அவர்கள் துணிந்து செய்வதை  தமிழக ஆட்சியினர்  - இங்கே ஆட்சியில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள்.  இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, அதே போல இடஒதுக்கீடு. 

கல்லூரி பல்கலைக்கழகம் எதுவாக இருந்தாலும், அதேபோல இப்போதிருக்கக்கூடிய பல்வேறு கல்வித்துறைகள் எல்லாம் கலைக் கப்பட்டு, எப்படி திட்டக்கமிஷன் என்பது கலைக்கப்பட்டதோ, அதேபோல, ஒற்றை ஆட்சி, ஒற்றைக் கல்வி முறை, ஒற்றை நிர்வாகம் என்று சொல்லி, கல்வி ஒழுங்காற்றுக்குழு என்று ஒரு குழுவை  மட்டுமே அமைத்து அதில் பிரதமர்தான் - தலைவராக மோடிதான் இருப்பார் என்று 484 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை, இங்கே நண்பர்கள் சொன்ன தைப்போல், கல்வியாளராக இல்லாத கஸ்தூரி ரங்கன் என்பவருடைய தலைமையிலே குழு அமைக்கப்பட்டது. யாருமே கல்வித்துறையில், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பயிற்சி பெற்று, மாணவர்களைப் பற்றியோ, தேர்வுகளைப் பற்றியோ தெரிந்தவர்கள் அல்ல.

இந்தக் கல்விக்குழுவை எதிர்ப்பதற்காகவும், நாடுதழுவிய அளவிலே மாவட்டத் தலை நகர்களிலே அறிவிக்கப்பட்டு நடைபெறுகிறது இந்த அறப்போராட்டம்.

‘நீட்’ தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நம் முடைய பிள்ளைகளை, தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட சமுதாயத்துப்பிள்ளைகளை, மாணவ, மாணவிகளை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது.  திருச்சியிலே ஒரு மாணவி, பட்டுக்கோட்டையிலே ஒரு மாணவி, அனிதாக்களில் தொடங்கி இது இன்னமும் தொடர் கதையாகிவருவது வேதனைக்குரியது. நம்முடைய மனங்களெல்லாம் ரத்தக் கண்ணீர் வடிக்கக்கூடிய துன்பகரமான ஒரு செய்தியையே கொடுத்து வருகிறது இந்த நீட் தேர்வு.

விரும்பாத மக்கள் மத்தியில் இதை ஏன் திணிக்கிறார்கள்? அரசுப்பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோர்  முதல் தலை முறையைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் வெறும் 3 பேர்தான். 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் வெறும் 29 பேர்தான்.

வெற்றி பெறுபவர்கள் யார்? யார்? தெரியுமா? வெற்றி பெற்றிருக்கின்றவர்களில் பலர் 12ஆம் வகுப்பில் தேர்வெழுதி முன்பு டாக்டர்கள் ஆவார்களே அந்த மாதிரி வந்தவர்கள் அல்ல, 2ஆண்டுகளுக்கு முன்னால், 3 ஆண்டுகளுக்கு முன்னால் படித்து, கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படுகின்ற பயிற்சி மய்யங்களில் பயிற்சி பெற்று அதற்குப்பிறகு வந்திருப்பவர்கள் தான், இரண்டாவதுமுறை, மூன்றாவது முறை தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் தான் இப்பொழுது வெற்றி பெற்றவர்களாக கணக்கு காண்பிக்கிறார்கள்.

ஒரே தேர்விலே குஜராத்துக்கு ஒரு கேள்வித்தாள், தமிழ்நாட்டுக்கு ஒரு கேள்வித்தாள். ஒற்றை முறை வேண்டும் என்று சொல்லி விட்டு, அதிலேயே ஒற்றை முறையில்லை. ஏமாற்று முறைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபலமான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் ‘நீட்’ தேர்வு அரசியல் சட்ட விரோதமானது. சமுக நீதிக்கு விரோத மானது. மாநில உரிமைகளுக்கு விரோதமானது. அந்த உரிமைகளைப் பறிக்கிறார்கள். இன்னுங் கேட்டால் கல்வி உரிமைக்கே எதிரானது' என்று கூறியுள்ளார். தேர்வுகள் நடத்த வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழகங்களின் பொறுப்பு. இதைத் தான் அரசமைப்புச்சட்டம் சொல்கிறது. பல்கலைக்கழகங்கள் மட்டுந்தான் தேர்வை நடத்த வேண்டும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்களே ஒரு தனிக்குழுவை அமைத்துக்கொண்டார்கள் என்றால் என்ன நியாயம்?

நாடாளுமன்றம்தான் இதை சொல்லிற்று என்று சொன்னாலும், அதே நாடாளுமன்றத் திலேதான் விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் விலக்கு கேட்டிருக்கிறார்கள். மசோதா வந்திருக்கிறது. மசோதா 3 ஆண்டுகளாகியும், ஊறுகாய் ஜாடியிலே ஊறிக்கொண்டிருக்கிறது.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போய்தான் இதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கல்விக்கொள்கையில் இருக்கிற மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் - கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு வரப் போகிறது.

மருத்துவக்கல்லூரி மட்டுமல்லாமல், கலைக் கல்லூரிகளுக்கே நுழைவுத் தேர்வு ஆபத்து வருகிறது. நீட் தேர்வு எல்லா படிப்புகளுக்கும் நீட் டப்படுகிறது. எனவேதான்  இந்தப் போராட்டம் தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேர்தலில் பாடம் புகட்டப்பட்டும், அவர்கள் திருந்தவில்லை தண்ணீர் தண்ணீர்  - கண்ணீர் கண்ணீர் என்று ஆகி வருகிறது.

காலையிலே உத்தரவு போடுகிறார்கள் தெற்கு ரயில்வேயில் தமிழிலே பேசக்கூடாது என்று. பாம்பு நோட்டம் பார்ப்பதுமாதிரி. புற்றுக்குள் தலையை இழுத்துக் கொள்வதைப் போல்தான் இது பகல் ஒன்றரை மணிக்குள்ளாக அறிவிப்பு வாபஸ் என்கிறார்கள். மக்கள் போராட்டம் முன் திணிப்புகளை எல்லாம் பின்வாங்கச் செய்ய முடியும் - இது ஒரு துவக்கம்தான் என் கூறியுள்ளார். 

நாட்டில் நடப்பது பற்றி தெளிவாக விரிவாக வீரமணியின் உரை இருந்தாலும், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மட்டுமல்ல இந்த நீட் தேர்வு. கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கும்கூட நீட்டைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என ஒரு குண்டைத் தூக்கி போட்டதால் பொதுமக்கள் மட்டுமல்ல மேடையில் இருந்தவர்களும் ஏதாவது பேசணும்னு இப்படி பேய் கதை சொல்றாரே என முணு முணுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios