திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் 2 நாள் சமூக நீதி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டின் முதல்நாளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சுபவீரபாண்டியன் ஆகியோரும், இரண்டாவது நாளில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, காதர் மொய்தீன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், ஜவாஹிருல்லா, இரா.அதியமான், எஸ்ரா.சற்குணம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மாநாட்டுத் திறப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்கிறார்.

மாநாட்டில் இன்று காலையில் பேசிய கி.வீரமணி இந்த இயக்கத்தின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமூக நீதி மாநாட்டின் நோக்கம் குறித்து அவர் பேசுகையில், “இந்த இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அடுத்த தலைவராக இந்த மாநாட்டின் தலைவரும், மகத்தான செயல்வீரருமான திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்” என்று அறிவித்தார்.

இதன்மூலம் கி.வீரமணிக்குப் பிறகு இவ்வியக்கத்தின் அடுத்த தலைவராக கலி.பூங்குன்றன் செயல்படுவார் என்பதை அவர் அறிவித்துள்ளார். 

திக தலைவராக பதவியேற்கவிருக்கும் கலி.பூங்குன்றன் 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவர். அவரது சொந்த ஊர் மயிலாடுதுறை. பெரியார் கொள்கை மீது ஈடுபாடு கொண்டு இளமைக்காலம் முதல் திக வில் செயல்பட்டு வருகிறார். பெரியார் தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட இவர், சுயமரியாதை இயக்கத்தின் செல்லப்பிள்ளை என்று பெரியாரால் பாராட்டப்பட்டவர். பெரியாருக்குப் பிறகு மணியம்மையாரும், மணியம்மையார் மறைவுக்குப் பிறகு கி.வீரமணியும் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்துவரும் நிலையில் அதன் 4ஆவது தலைவராக கலி.பூங்குன்றன் தலைவர் பதவிக்கு வர இருக்கிறார்.