தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில கவர்னராக தேர்வு செய்யப்பட்டதில் பெரியாரின் வெற்றி இருக்கிறது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ‘’ தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டதும் அவரை வாழ்த்தினேன். ரைட் வுமன் இன் த ராங் பார்ட்டி என்று அவரை சொல்ல மாட்டேன். அன்பு மகள் தமிழிசையை வாழ்த்துகிறேன் என்று தான் அவரை வாழ்த்தினேன்.

 

அதற்கு, காரணம் நானும் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையான குமரிஅனந்தனும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். அதனால், தமிழிசையை எப்போதுமே என் அன்பு மகள் என்றுதான் சொல்வேன்.

எல்லாவற்றையும்விட அவர் ஒரு பெண். காலம் காலமாக சமூகநீதி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் ஆளுநர் பதவிக்கு வந்துள்ளார். ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று நான் பார்க்கிறேன். அதில் பெரியாரின் வெற்றி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., .ஜே.பியால்கூட சமூக விஞ்ஞானத்தைப் புறக்கணித்துவிட முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்’’ என்று அவர் கூறியுள்ளார்.