அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59ஆக அதிகரித்திருப்பதன் மூலம் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு நிலையங்களில் பதிவு செய்து காத்திருந்தவர்கள், ‘இலவு காத்த கிளிகளாக’ ஆன பரிதாபம் ஏற்பட்டுள்ளதாக திராவிடர் கழக செயலாளர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வயதை 58லிருந்து, 59ஆக ஓராண்டு கூடுதலாக நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்து, அதற்கேற்ப அரசின் அடிப்படை விதிமுறைகளையும் விரைவில் திருத்திட முனையவிருப்பதாகவும் செய்திகள் வந்திருப்பது, மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியது. திராவிடர் கழகம் இந்த முடிவினை வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுப்பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து, அந்த வாய்ப்பு கிடைக்காது வேதனையில் வெந்து கொண்டிருக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் எண்ணத்தில், வாய்ப்பில் மண்ணைப் போட்ட மாபெரும் தவறான முடிவு ஆகும் இது! பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு நிலையங்களில் பதிவு செய்து காத்திருந்தவர்கள், இப்போது இதன்மூலம் ‘இலவு காத்த கிளிகளாக’ ஆன பரிதாபம்! மிகப்பெரிய தவறான முடிவு இது!
அதுமட்டுமா? அந்த 25,000 வேலைவாய்ப்புகளும், 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி புதிதாய் நியமனம் செய்யப்பட்டிருந்தால், அதன்மூலம் புதிய வாய்ப்புகளைப் பெற ஆவலாக இருந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் விருப்பமும் சிதைக்கப்பட்டதாகிவிட்டது. சமூகநீதி - அதுவும் ‘‘அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி’’ என்று கூறிக்கொண்டு, அவர் கொண்டு வந்த 69 சதவிகித இடஒதுக்கீடு வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டோருக்குக் கிடைக்காமல் செய்யும் மிகப்பெரிய தவறான முடிவு இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களின் ஆதரவு பெற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பு இதனைக் கண்டனம் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
மற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சில விசுவாச சங்கங்கள் - 59ஆக ஓய்வு வயதை உயர்த்தியதை வரவேற்றுள்ளன. இதைத் தமிழக அரசு இப்போது முடிவு செய்தது, இந்த அரசு ஊழியர்கள் நலன் கருதி அல்ல. மாறாக, ரூ.5,000 கோடி நிதியை மிச்சப்படுத்த இது ஒரு குறுக்குவழி - உத்தி என்பதால்தான், என்பதை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். சில நிதித்துறை அதிகாரிகள் கூறியதன் விளைவு இந்தத் தவறான முடிவு. ஓய்வூதியத் தொகை மூலம் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கிராஜுயூட்டி தொகை பாக்கி ரூ.2,763.63 கோடியும், மற்றபடி புதிய பென்ஷன் தொகை சுமார் 2,220 கோடி ரூபாயும் இப்போது தரப்பட வேண்டிய நிலையை தள்ளிப்போட்டு, இப்படி ஒரு ‘சமத்கார யோசனையை’ சில நிதித்துறை அதிகாரிகள் கூறியதன் விளைவு இந்தத் தவறான முடிவு.
இந்தத் தொகை சுமார் 5,000 கோடி ரூபாய்க்கு வேறு மார்க்கத்தை - அரசு ஊழியர்களுக்குக்கூட குறிப்பிட்ட ஒரு தொகை அளித்துவிட்டு, எஞ்சியதை பாண்டு (Bond) மூலமோ அல்லது மாற்று ஏற்பாடு மூலம் அரசு ஊழியர்கள் அமைப்புகளை (ஜாக்டோ ஜியோ உள்பட) முக்கிய பல தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி நல்ல கருத்திணக்கத்தை (Consensual Approach) ஏற்படுத்தி யாருக்கும் பாதிப்பில்லாத ஒரு Win- Win நிலைமையை ஏற்படுத்தியிருந்தால், புதிய இளைஞர்கள் வாழ்வில் இப்படி விரக்தியடையும் நிலை ஏற்படாது.


இந்த உத்தியோகங்கள் பலவற்றை தனியார்மூலம் ஒப்பந்தங்களை விட்டு, தனியார்மயம் ஆக்கப்படக் கூடிய, பாரதூர விளைவுகளும் எதிர்பார்க்கப்பட வேண்டியதாகும்! தீராப் பழியை சுமக்கலாமா? இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்! பா.ஜ.கவின் மத்திய அரசு, சமூகநீதிக்கு எதிராக மாணவர் சேர்க்கையிலும், வேலைவாய்ப்பிலும் குழிபறிக்கும் நிலை ஒருபுறம் என்றால், மாநில அரசும் கூடவா - அதுவும் அண்ணா பெயரில் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேரில் ஆட்சி என்று சொல்லிக் கொண்டே இப்படி 69 சதவிகித இடஒதுக்கீட்டினையும் காற்றில் பறக்கவிட கனகச்சித ஏற்பாடுபோல, இரவில் வீட்டில் கன்னக்கோல் வைத்துப் பொருளை எடுத்துச் செல்வதுபோல, 25,000 அரசு வேலைவாய்ப்புகளை இப்படி ஓர் ஆணையின்மூலம் எவ்வித முன்யோசனையுமின்றி - சில அதிகாரிகளின் தவறான ஆலோசனை, வழிகாட்டுதலினை ஏற்று, தீராப் பழியைச் சுமக்கலாமா? இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.