சுற்றுச்சூழல் தாக்க வரைவு, உண்மையிலேயே தமிழகத்தை தாக்கத்தான் வருகிறது என்பது உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்த பதிலில் தெளிவாகியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 277.3 கி.மீ தொலைவிலான 8 வழிச்சாலையை இரண்டே கால் மணி நேரத்தில் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்துக்காக ஏராளமான மரங்களை அழிப்பதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்கள் நிலம் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் இருந்தது.


இந்த திட்டத்துக்கான அறிக்கையை கிடப்பில் போட விரும்பிய சென்னை உயர்நீதிமன்றம், இந்த திட்டம் செயல்படுத்தும்போது வன நிலங்கள், நீர் நிலைகள், தாவரம் மற்றும் விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிதாக திட்ட ஆய்வறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று விரும்பியது. இந்த சூழ்நிலையில், 8 வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு, சட்டம் ஆகும் முன்பே மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது.
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் மாறும். தனியார் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் தனியார் நிலத்தை அபகரிக்க மட்டுமே உதவும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. இந்த வரைவு, உண்மையிலேயே தமிழகத்தை தாக்கத்தான் வருகிறது என்பது உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்த பதிலில் தெளிவாகியுள்ளது. 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...” என்ற பழமொழியைத் தான், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பதில் நினைவுபடுத்துகிறது.