கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் காரணமாக குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 17 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து 15 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் படி சிவாஜி நகர், கே.ஆர்.புரம், அத்தானி, கோகாக், ஹரிகேசூர், ராணிபென்னூர், விஜயநகரா, ஓசக்கோட்டை, யஷ்வந்த் புரம், மகாலட்சுமி லே-அவுட், காகவாடா, எல்லாபுரா, கே.ஆர். பட்டை, ஹுன்சூர், சிக்பள்ளாபூர் ஆகிய 15 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது.

பல்வேறு தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று  வாக்களித்தனர். கே.ஆர்.புரத்தில்  பாஜக வேட்பாளர் பைரதி பசவராஜ் தனது  மனைவியுடன் வாக்களித்தார்.

முன்னதாக கிராமத்தில் உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்த  பைரதி தம்பதியினர் மேடஹள்ளி அரசு ஆரம்பப் பள்ளியை அடைந்தனர். கே.ஆர். புரத்தின் அடையாளமும், பெரும்  பணக்கார அரசியல்வாதியுமான பைரதி பசவராஜ் மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கே.ஆர்.புரம் வாக்காளர்களை தங்களுக்கு வாக்களிக்கமாறு கேட்க கொண்டனர்.

பைரதி தம்பதியினர்  காலை 7:30 மணியளவில் மேடஹள்ளிக்கு வந்து வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைரதி பசவராஜ்  தான் முதல் முறையாக பாஜகவில் இருந்து போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த தொகுதி மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து என்னை வெற்றிபெறச் செய்து விதான் சௌதாவுக்கு அனுப்புவார்கள் என தெரிவித்தார்.

கே.ஆர்.நகர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தனக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான பைரதி, கர்நாடக  மக்களின் வளர்ச்சிக்காக பாஜகவில் சேர்ந்ததாக அவர் முன்பு கூறியிருந்தார்.