’இன்னும் எத்தனை காலத்துக்குதான் காங்கிரஸை நாம் தோளில் சுமந்து கொண்டு அலைவது?’ என்று நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு மிக நேரடியாக கதர் கட்சியை கழட்டிவிடும் வேலையை  துவக்கியவர் மாஜி தி.மு.க. அமைச்சரான கே.என்.நேரு. இதை தங்களுக்கு அவர் கொடுத்த அல்வாவாகத்தான் பார்த்தனர் தி.மு.க.வினர். 

நேரு முன்மொழிந்த கருத்தினை ஸ்டாலினின் மகனான உதயநிதியும் வழிமொழிந்தார். எப்படி என்றால், காங்கிரஸ் ஜெயித்திருந்த நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரும் நிலையில் அங்கே தாங்கள் நிற்க வேண்டும்! என்றும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும் திருச்சியில் நடந்த கழக நிகழ்வில் பேசினார். இதெல்லாம் காங்கிரஸ் கட்சியினரை அவமானப்பட வைத்தது. 

‘தமிழகத்தில் கூட்டணியின் தலைவன் எனும் பொறுப்பில் இருந்து கொண்டு தி.மு.க. நம்மை ஓவராய் ஆட்டி வைத்து அசிங்கப்படுத்துக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெற்ற வெற்றி ஸ்டாலினால் மட்டுமே வந்தது என்று அக்கட்சியினர் நினைத்து, ஓவராய் போகிறார்கள்.’ என்று புலம்பிக் கொட்டினர் தங்களின் ஆலோசனை நிகழ்வில். 

இப்படியாக ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் முதல் ஆளாய் அல்வா கொடுத்த கே.என்.நேரு, சமீபத்தில் காங்கிரஸின் எம்.பி. திருநாவுக்கரசருக்கு சமோசா கொடுத்ததுதான் செம்ம கலாய்ப்பான சேதி. அதாவது திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் திருநாவுக்கரசர், நன்றி சொல்லி தொகுதி எங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நன்றி தெரிவிக்க சென்ற அரசருடன் நேருவும் சென்றிருக்கிறார். எம்.பி.க்கு அங்கிருக்கும் பிரபல கடை ஒன்றில் சமோசா, பஜ்ஜி, டீ என ஏகப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை வாங்கிக் கொடுத்து குஷியாக்கி இருக்கிறார் நேரு. 

சாப்பிட்டு முடித்த பின், ‘சரி மறுபடியும் நன்றி அறிவிப்பை தொடரலாமா?’ என்று அரசர் கேட்க, ‘கை எண்ணெய்யா இருக்குது. கழுவிட்டு வந்துடுறேன். நீங்க ஆரம்பிங்க ’ என்று சொல்லி கிளம்பியவர் அதன் பிறகு அந்த திசைக்கே வரலையாம். காத்திருந்து காத்திருந்துன் அரசரும் நொந்துட்டாராம். 

ஹும் காங்கிரஸை கை கழுவுறதுல நேரு ரொம்ப சுட்டியா இருப்பார் போல. நடத்துங்கண்ணே நடத்துங்க.