எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதல்வராக வெறும் அறுபது எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமென பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றனர் ,  சமூகநீதி போராட்டங்களின் மூலம் தமிழகத்தில் தனக்கென தனி இடம் பிடித்த கட்சி பாமக ,  பின்னர் சாதி கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டு சாதிக் கட்சியாக பார்க்கப்படும் நிலையில் பாமகவுக்கு உள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாமக  சந்தித்தது . ஆனால் நினைத்தபடி பாமகவால் வெற்றிபெற முடியவில்லை  

முன்பு இருந்ததைக் காட்டிலும் மிக மோசமான தோல்வியே பாமகவுக்கு மிஞ்சியது ,  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரவுள்ள நிலையில் பாமக அன்புமணியை  மீண்டும்  முதல்வர் வேட்பாளர் என கூறிவருகிறது,  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி  மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது , இதில்  அக்கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார் ,  அப்போது பேசிய அவர்,   மருத்துவர் ராமதாஸ் இந்த சமூகத்திற்கும் கட்சியினருக்கும் யாரும் செய்யாத வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார் .  இந்நிலையில் அவரைப் பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவு செய்து வருவது வேதனை அளிக்கிறது .  இந்நிலையில் பாமகவை சேர்ந்தவர்கள் பலர் உள்ளாட்சி பொறுப்புகளை பெற்றுள்ளனர் .  நாமும் கூட்டணியை தர்மத்திற்காக பல இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம். 

ஆனாலும் எதிர்வரும் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 60 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று வந்துவிட்டால் தமிழகத்திற்கு அன்புமணி தான் முதல்வர் ,  நானும் அமைச்சர் ஆகிவிடுவேன் , பிறகு  நீங்கள் எல்லாம் என்ன ஆவீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள் எனக்கேட்டு உத்வேகத்துடன் அனைவரும் பணியாற்ற வேண்டுமென கேட்டுகொண்டார்,  அன்புமணியை முதலமைச்சராக பதவியில் அமர வைக்க அனைவரும் கட்சியில் ஏற்றத்தாழ்வுகளை மறந்து பணியாற்றவேண்டும் மாவட்ட செயலாளர்களை அடிக்கடி மாற்றுவதை நிறுத்துங்கள், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள் என கூறினார் .  ரஜினிகாந்துடன் பாமக கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில் அன்புமணி முதலமைச்சர் ஆக வேண்டும் என பாமகவினர்  பேசி வருவது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது .