தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக மறுத்துவருகிறது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜகவினர் பேசிவருகிறார்கள். இதனால், அதிமுக - பாஜகவினர் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபற்றி தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுராந்தகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர்  எடப்பாடி பழனிச்சாமிதான். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார் என்பதை பாஜக தான் முடிவு அறிவிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம். இந்த கூட்டணியில் இங்கே யார் தலைவர் என்று முருகனோ அல்லது வானதி சீனிவாசனோ அறிவிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்துக்கு வருகை தரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாதான் அறிவிப்பார்” என்று மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.