மக்களவை தேர்தலின் போது மாவட்ட ஆட்சியர் அன்பழகனை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி.,ஜோதிமணி, திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ஆகியோர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். 

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக செந்தில்பாலாஜி மற்றும் ஜோதி மணி ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதனிடையே மக்களவை தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய தி.மு.க., அ.தி.மு.க. ஒரே நேரத்தில் அனுமதி கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தான் தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அதில் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தி.மு.க. வக்கீல் செந்தில் மற்றும் 100 பேர் எனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்து கதவை தட்டி, அச்சுறுத்தியதாக புகார் செய்தார். இதனையடுத்து ஜோதிமணி, செந்தில் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க இருவரும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில் குமார் ஆகியோ கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகார்த்தி முன்பு இன்று ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டனர்.