அதிமுகவில் தொடர்ந்து இணையும் பாஜக நிர்வாகிகள்..! மாநில செயலாளரை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
பாஜகவின் ஐடி பிரிவை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தநிலையில், நேற்று ஐடி பிரிவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் இணைந்தார். இதனையடுத்து இன்று உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி உடையும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணத்தை விளக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம் என கடுமையாக அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
அதிமுகவில் இணையும் பாஜகவினர்
பாஜக நிர்வாகி அதிமுகவில் இணைத்ததற்கு பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என கூறியவர்கள் தற்போது 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்து இருந்தார்.
டுவிட்டர் பதிவு வெளியிட்ட மறுநாளே தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்தார்.இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.. அவரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து பாஜகவினர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாஜகவில் இருந்து விலகும் நிர்வாகிகள்
அதிமுகவினரும் பாஜகவினருக்கு எதிராக கருத்துகளை கூறியும் போராட்டதை நடத்தினர். இந்தநிலையில் இன்றும் பாஜகவை சேர்ந்த உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகியும் எடப்பாடியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
பாஜகவினரை அதிமுகவில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்றைய தினம் மீண்டும் பாஜக மாநில செயலாளரை அதிமுகவில் இணைத்தது பாஜக மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்