டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களின் சங்கம் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘‘முகமூடி அணிந்த குண்டர்களால் நான் மோசமாக தாக்கப்பட்டேன். 

எனது மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது. அவர்கள் என்னை மிகவும் கொடூரமாக தாக்கினார்கள்’’ என்றும் கோஷ் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வளாகம் வாசல் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘‘பல்கலைக்கழகத்திற்குள் வன்முறை நடந்தது குறித்து கேள்வி பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். போலீசார் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும். 

பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பாதுகாப்பாக இல்லை எனில் நாடு என்படி முன்னேறும்’’ என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார். அதே நேரத்தில் ஏபிவிஎச்-ஐ சார்ந்தவர்கள்தான் முகமூடி அணிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழக மோதலையடுத்து, டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, மோதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.  ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள்  திரண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அதேபோல், புனேவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டில் பயிலும் மாணவர்கள், டெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தினர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கேட்வே ஆப் இந்தியா முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.