ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் எனவும், இல்லையேல் சிறுதாவூர் பங்களாவில் கூட கொள்ளை முயற்சி நடக்கலாம் எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே ஜெயலலிதா பங்களாவில் பணத்தை கொள்ளையடிக்கவே கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடலூரில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் எனவும், இல்லையேல் சிறுதாவூர் பங்களாவில் கூட கொள்ளை முயற்சி நடக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலாளர்களுக்கு எதிராகவும், கார்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு செயல்படுகிறது.

அதிமுகவின் பிளவு, ஒன்றினையும் விவகாரத்தில் பா.ஜ.க தலையீடு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.