சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வரும் டிசம்பருக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுயில் கிடைத்த அபார வெற்றிக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக ஆர்வத்துடன் உள்ளது.

இந்நிலையில் சென்னை ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலில் 95 சதவிகித இடங்களில் நாம் வெற்றிபெறுவோம்.  நாங்குநேரி, விக்கிரவாண்டியில் எப்படி திட்டமிட்டு வெற்றி பெற்றோமோ அதேபோல் வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெற குழு அமைக்கப்படும். சிறந்த வேட்பாளர்களை தயார்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.


இதனிடையே  உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார்  தனது மகனுக்கு சென்னை மேயர் பதவி வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அவைத் தலைவர் மதுசூதனன் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும், உள்ளாட்சித் தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று அவர் கமுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்கலாம் என்ற முடிவில்  இருந்த நிலையில் மதுசூதனன் பேச்சு கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது..