நகை கடன் தள்ளுபடி..! உள்ளாட்சித் தேர்தலுக்கு பக்கா ஸ்கெட்ச் உடன் தயாரான திமுக..!
கடந்த மூன்று மாத காலமாகவே நகைக்கடன் தள்ளுபடிக்காக அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர். அதாவது ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் அல்லாமல் விரைவில் நகர்புறங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே நகைக்கடன் தள்ளுபடி சரியான பயனாளிகளுக்கு சரியான முறையில் சென்று சேர்வதை உறுதிப்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் காலையில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டு அசர வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதலே திமுக வாக்குறுதி கொடுத்து வருகிறது. அப்போது இந்த வாக்குறுதி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றாலும் மத்தியில் பாஜகவே ஆட்சிக்கு வந்த காரணத்தினால் வாக்குறுதியை திமுகாவால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்போவதாக திமுக மறுபடியும் வாக்குறுதி கொடுத்தது.
ஆனால் அதிமுக அரசு உடனடியாக அந்த அறிவிப்பை வெளியிட்டு தள்ளுபடி நடவடிக்கைகளையும் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அறிவிப்பை முழுமையாக அதிமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் நகைக்கடன் தள்ளுபடி எப்போது வரும் என்பது தான் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஐந்து சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்று திமுக மற்றும் அதிமுக அறிவித்த நிலையில், எப்படியும் அது செயல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையில் பலர் தங்கள் நகைகளை கொண்டு சென்று அடமானம் வைத்தனர்.
இந்த நிலையில் ஆளுநர் உரை, பட்ஜெட் என சட்டப்பேரவையின் முக்கிய நிகழ்வுகளின் போது நகைக்கடன் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போதெல்லாம், நகைக்கடன் தள்ளுபடி என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் தான் சட்டப்பேரவையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
இதனிடையே இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது அனைவருக்குமானது இல்லை என்பதையும் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன் என்கிற வகையில் தள்ளுபடி இருக்கும். இதற்காக சுமார் 6000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு செலவு பிடிக்கும். ஆனால், கடந்த மூன்று மாத காலமாகவே நகைக்கடன் தள்ளுபடிக்காக அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர். அதாவது ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் அல்லாமல் விரைவில் நகர்புறங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே நகைக்கடன் தள்ளுபடி சரியான பயனாளிகளுக்கு சரியான முறையில் சென்று சேர்வதை உறுதிப்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி பயனாளிகள் அனைவரையும் இறுதி செய்த பிறகே நகை கடன் தள்ளுபடி அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அந்த பயனாளிகளின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தேர்தலில் பெற்றுவிட முடியும் என்று ஸ்டாலின் நம்புகிறார். அந்த அளவிற்கு எவ்வித சர்ச்சைக்கும் இடமில்லாமல் நகைக்கடன் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.