நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்த அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தான் பதவி ஏற்றதும் ஜெகன் மோகன் ரெட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளார். இந்த ஆண்டிலேயே அம்மாநிலத்தின் மது கொள்கை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு, படிப்படியாக செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அனுபவம் மிக்க அரசியல்தலைவர்களே மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த முடிவுக்கு ஒருசாரார் வரவேற்றுள்ளனர். மதுவின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முழு மதுவிலக்கு இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு ஆண்டும் கொள்கை மாற்றி அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் மது விநியோகிக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகளை குறைப்பது, விலையை அதிகரிப்பது போன்ற அம்சங்களும் புதிய கொள்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..