நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்
கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் பிளவு ஏற்படாமல் இருக்க ஓ.பன்னீர் செல்வத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இணை பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ்க்கு வழங்க முன்வந்ததாக முன்னாள் அமைச்சர் தங்மணி தெரிவித்திருந்தார். மேலும் பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தார் எனவும் தங்கமணி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளரான ஜே சி டி பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அதிமுக பொதுக்குழு ரத்து செய்யகோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் தகவல்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தவறான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக 3 மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உடன் அதனைக் கண்டு அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த தங்கமணி ஒருவித பயத்துடனும் கவலையுடனும் பயத்துடனும் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடர்ச்சியாக தவறான தகவல்களை தெரிவித்து வருவதாக கூறினார். தர்மயுத்தத்தின் போது தனக்கு பதவி கிடைக்க விட்டாலும் கட்சி உடைந்து போய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஓபிஎஸ் அதிமுகவை ஒன்றினைய சம்மதித்ததாகவும் தெரிவித்தார். இரு அணிகளும் இணையும் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அளித்த ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை எனவும் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தான் என தங்கமணி, வேலுமணி கூறியதாகவும் குறிப்பிட்டார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை டெல்லி செல்லும் போது ஓ. பன்னீர்செல்வத்தை மட்டும் தான் அழைத்துச் சென்றதாகவும் ஒரு முறை கூட எடப்பாடி பழனிச்சாமியை அழைத்துச் சென்றதில்லை என தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அழைத்தபோது இபிஎஸ் ஓபிஎஸ் உடன் செல்ல மறுத்து விட்டதாகவும் எனினும் ஓபிஎஸ் தொடர்ந்து அமைதி காத்து கட்சிக்காக தனது உரிமைகளை விட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த ஜூன் மூன்றாம் தேதி அதிமுக பொது குழுவில் ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அதற்கு முந்தைய டிசம்பர் மாதம் தானே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவி தேர்வு செய்யப்பட்டது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார். கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் வைத்தியலிங்கம் நத்தம் விஸ்வநாதன் அடிக்க பாயவில்லை எனவும் தங்கமணி தவறான தகவலை ஊடகங்களில் வெளியிடுவதாகவும் கூறினார்.
மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் தொடரும் உயிர் பலி...! திமுக அரசே பொறுப்பு- அண்ணாமலை ஆவேசம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும் மேலும் ஒவ்வொரு முறை தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை அடிப்படையில் அந்த குழுக்கள் செயல்படும் என இருந்த நிலையில் அந்த நடைமுறைகளை முழுவதுமாக மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என குற்றம் சாட்டினார். இதன் காரணமாக தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்தார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி வேலுமணி தங்கமணி ஜெயக்குமார் ஆகியோரை வைத்துக் கொண்டு பதவி வெறிபிடித்து அலைவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்கமணி மற்றும் வேலுமணியின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் அவர்கள் உத்தரவின் பேரிலேயே அவர்கள் கூட்டத்திற்கு செல்வதாகவும் தெரிவித்தார். விரைவில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான இடத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பாளர் எனவும் ஜே சி டி பிரபாகர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்