jayatv and Kalaignar tv join hand together against OPS and EPS

வெள்ளைக்காரன் இந்தியாவை பிடிக்குறதுக்கு முன்னாடி, இங்கே இருந்த குறுநில மன்னருங்க எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகார போட்டியில அடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா வெள்ளக்காரன் திடுதிப்புன்னு வந்து நின்னதும், இவங்கல்லாம் ஒண்ணா சேர்ந்து பொது எதிரியான அவனை எதிர்த்தாங்க! இது வரலாறு... ஆனால் சமகால தமிழக அரசியலிலும் இதே சூழ்நிலைதான் நிலவுது.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் எம்.ஜி.ஆர். தனக்கென சொந்த கட்சியை துவங்கியதிலிருந்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு இடையில் பெரும் போர் நடந்து கொண்டிருந்தது. இரு பெரும் இயக்கங்களின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் அடிப்படையான சக மனிதனை நோக்கிய நட்பை கூட பரிமாறிக் கொண்டதில்லை. கட்சியில் பெரிதாக தலையெடுத்த பின் ஸ்டாலின் சற்றே இந்த நாகரிகத்தை கடைப்பிடிக்க துவங்கினாலும் கூட அ.தி.மு.க. தன் பிடியிலிருந்து இறங்கி வந்ததில்லை. 

இந்நிலையில் ஜெ., மறைவுக்குப் பிறகு இந்த சூழலில் பெரும் மாற்றம் வந்திருக்கிறது. அதுவும் சசி ஜெயிலுக்குச் சென்று, எடப்பாடி மற்றும் பன்னீர் அணியானது ஆட்சியையும், கட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி சசி - தினகரனை ஒடுக்கி ஓரங்கட்ட முயல துவங்கிய பின் மிக வெளிப்படையான மாற்றம் இந்த சூழலில் வந்துள்ளது. 

எடப்பாடி - பன்னீரை தோற்கடிக்க ஸ்டாலினோடு ரகசிய கைகோர்ப்பில் தினகரன் இருக்கிறார் என்று ஒரு விமர்சனம் இருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த மோடி, கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த செய்தியை விஷூவலுடன் ‘கோபாலபுரம் - சென்னை’ எனும் லொக்கேஷன் கார்டு போட்டு ஒளிபரப்பியது ஜெயா பிளஸ் சேனல். ஜெயா செய்தி குழுமம் இப்போது சசி - தினகரன் அணி கைகளில் இருக்கிறது என்பதை கவனிக்க. 
இந்த விஷயம் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு பெரும் இயங்களுக்குள் ஆச்சரியத்தை கிளப்பியிருக்கும் நிலையில், இன்று கலைஞர் தொலைக்காட்சி அதற்கு பிரதியுபகாரம் செய்திருக்கிறது. 

தினகரன் மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களில் நடந்த ரெய்டு பற்றி செய்தியை வெளியிட்டிருக்கிறது கலைஞர் செய்தி தொலைக்காட்சி. வெறுமனே ரெய்டு என்று சொல்லியிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. ஆனால்...

“எங்களை மிரட்டும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. என்னையும், சசிகலாவையும் தீவிர அரசியலில் இருந்து அகற்றவே இந்த ரெய்டு நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்பட போவதில்லை” என்று தினகரன் பேட்டி கொடுத்துள்ளதாக பிளாஸ் கார்டு போட்டுக் காட்டி செய்தி ஒளிபரப்பியிருக்கிறது. 
இந்த வகையில் டிடிவி குரூப் மெத்த மகிழ்ச்சி. 

ஆக ஸ்டாலின் கையிலுள்ள கலைஞர் செய்தி குழுவும், தினகரன் கையிலுள்ள ஜெயா செய்தி குழுவும் இப்படி பரஸ்பரம் உதவிக் கொள்வது இவர்கள் எதை நோக்கி நகர்கிறார்கள் என்று அரசியலரங்களை யோசிக்க வைத்திருக்கிறது.