இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெயபிரதா. கடந்த 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர், சமாஜவாதி கட்சியில் இணைந்தார் ஜெயபிரதா. மேலும் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். ஆனால், கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி கடந்த 2010-ஆம் ஆண்டு சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய செயலர் பூபேந்தர் யாதவ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி ஆகியோர் முன்னிலையில் ஜெயபிரதா பாஜகவில் தன்னை இன்று  இணைத்துக்கொண்டார்.

இதையடுத்து நடிகை ஜெயபிரதாவுக்கு ராம்பூர் தொகுதியில் போடியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 

இதில்  ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருண் காந்திக்கு பிலிப்பைட் தொகுதியும், மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு சென்ற ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு அலகாபாத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.