உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு எதிராக செயல்பட்ட அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் சாபம் விட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தற்போது மாவட்ட செயலாளர் பதவி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வசம் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோப்பு வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

ஈரோடு புறநகர் மாவட்டத்த்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும், தற்போதைய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.சி.கருப்பணனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம். தற்போது இது பூதாகரமாக வெடித்துள்ளது.இதனிடையே, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டவரை வெற்றி பெறச் செய்வதற்கு அமைச்சர் கருப்பணன் முயற்சித்ததாகவும், பின்னர் இது முறியடிக்கப்பட்டதாகவும் தோப்பு வெங்கடாச்சலம் தரப்பினர் முதல்வரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.;- எனது தொகுதி மக்களுக்காக நான் அமைச்சராக இருந்த போதும் இப்போதும் பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளேன். தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த திட்டத்தையெல்லாம் நிறைவேற்ற விடாமல் அமைச்சரே தடுத்து வருகிறார். பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தொடங்கினால் பெருந்துறை தொகுதி மக்களுக்கு ஆண்டாண்டுக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது.

ஆனால், இந்த திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரு திட்டத்தையே ஒரு அமைச்சர் தடுக்க முயலவது வேதனையாக வேடிக்கையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டார். சுயேட்சைகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஊர் முழுக்க சாய கழிவு நீர் ஓடி கொண்டு இருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் குத்து பாடலுக்கு இவர் ஆட்டம் போடுவது வினோதம். இப்படி கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது. அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.