சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி பணிகள் விறுவிறுப்பாக தொடங்கின் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகளை முடிக்க தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

 பீனிக்ஸ் வடிவில் 50.8 கோடி செலவில் ஜெயலலிதா சமாதியை கட்ட கடந்த மே 7-ம்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். அதை தொடர்ந்து நினைவிடம் கட்டுமான பணிகள் தொடங்கின. அவர் இறந்த தினமான டிசம்பர் 5ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அதனால் அவருக்கு நினைவிடம் கட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவு கட்டப்படுவதாகவும் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறி தடை விதிக்க தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனால் சமாதி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக கருத முடியாது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். இதனையடுத்து ஜெயலலிதா சமாதி பணிகளை மீண்டும் தமிழக அரசு விறுவிறுப்பாக தொடர ஆரம்பித்துள்ளது. இந்தப்பணிகளை வெகு விரைவாக முடித்து வைத்து திறக்கப்பட உள்ளது.