அமமுகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் ஆளுங்கட்சியினர் எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

59 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக, பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை வழங்கிட வேண்டுமென்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து குக்கர் சின்னம் வழங்க முடியாது என நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

 

இந்நிலையில் 59 வேட்பாளர்களுக்கும் தனித்தனி சின்னத்தில் போட்டியிடுவது என்பது இயலாத காரியம். ஆகையால் குக்கர் இல்லை என்றால் அனைத்து வேட்பாளருக்கும் பொதுவாக வேறு ஒரு சின்னத்தை நீதிமன்றம் ஒதுக்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி தோ்தல் ஆணையத்தில் பொதுச் சின்னம் கேட்டு அமமுக சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் நேற்று தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். 

பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வேட்பாளா்களுடன் இணைந்து மரியாதைச் செலுத்தினார். ஆனால் அதிமுக வேட்பாளர்கள் அறிவித்த போதும் பிரச்சாரம் தொடங்குவதற்கும் முன்னதாகவும், ஜெயலலிதா சாமதியில் சென்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்னர் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பொன்ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது 
ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியின் சின்னத்தை பெறுவதற்கு கூட ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி இவ்வளவு அழுத்தம், நெருக்கடி கொடுக்கின்றனர். எங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் ஆளுங்கட்சியின் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆனால், மக்கள் ஆதரவுடன் அவற்றை எதிர் கொள்வோம். மக்கள் ஆதரவு இருக்கும்போது வெற்றி பெறுவதற்கு சின்னம் ஒரு பிரச்னை இல்லை. எந்தச் சின்னத்தை வழங்கினாலும் தமிழகம் முழுவதும் வெற்றி கொள்வோம் என்றார்.