ஆடிக்காற்றில் அம்மிகல்லுடன் அம்மாவின் ஆட்சி பறக்கும்' என தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் 'எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான்' என கூறினார்.

தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை, ’’மாறிவரும் உணவுபழக்கம் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகை பொருட்களை அதிகம் உட்கொள்ளும் இளம்வயதினர், சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்’’ எனக் குறிப்பிட்டார்.

’’சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கை படம் போல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களை இடம் பெற செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும்’’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்தார்.

’’கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது, அந்த இனிப்பு தின்பண்டங்களை அதிகமாக உட்கொண்டால் உடலில் என்ன பாதிப்பு வரும் என்பதை, சிகிரெட் பாக்கெட்டில் உள்ள விழிப்புணர்வு போல் விளம்பரம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்’’ என்று பூங்கோதை கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர், உறுப்பினர் பூங்கோதை நல்ல கருத்தை கூறியுள்ளார், எனவே இது குறித்து அரசு பரிசீலிக்கும் ’என்று கூறினார்.

சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றது குறித்து, திமுக உறுப்பினர் பூங்கோதையின் கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். அப்போது ’நிதி ஆயோக், தவறான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது, இது குறித்து, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்’’ எனக் கூறினார்.

தொடர்ந்து பூங்கோதை பேசும் போது நீட் தேர்வால் சமூக நீதி மறுக்கப்பட்டு உள்ளது. தனியார் மையங்கள் பணம் சம்பாதிக்க கொண்டு வரப்பட்ட தேர்வு. ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சி பறந்து போய்விடும்’’ என பேசினார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்து தான், ஜெயலலிதா அன்றைக்கே அனைவருக்கும் மிக்ஸி கொடுத்துள்ளார், என்றைக்கும் ஜெயலலிதா ஆட்சி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசும்போது, 'ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை. ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை'  என கூறினார்.