மத்திய அரசுடன் இதுநாள் வரை சுமூகமான உறவை தொடர்ந்து வந்த எடப்பாடி பழனிசாமி அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைகளால் ஜெயலலிதா பாணி அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.    தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற சிறிது நாட்களிலேயே மோடியை சந்தித்துவிட்டு வந்தார். அப்போது முதலே மோடி – எடப்பாடி இடையே சுமூகமான உறவு இருந்து வந்தது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றும் முதல் மாநிலமாக தமிழகம் மாறிப்போனது. இதற்கு உதாரணமாக உதய் மின் திட்டத்தில் இணைந்ததை கூறலாம். இதுமட்டும் அல்லாமல் வி.ஐ.பிக்கள் பயன்படுத்தும் சைரன்களை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மோடி வேண்டுகோள் தான் விடுத்தார். முதல் ஆளாக சென்று எடப்பாடி தனது காரில் இருந்த சைரனை தானே அகற்றினார். இப்படியாக மோடிக்கு மிகவும் பிடித்தமான முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி விளங்கி வந்த காரணத்தினால் கட்சி மற்றும் ஆட்சியிலும் தனது ஆதிக்கத்தை அவர் விரிவுபடுத்தினார். ஓ.பி.எஸ் தரப்பு ஆட்சியில் மட்டும் இல்லாமல் கட்சியிலும் ஓரங்கப்பட்டது.சட்டமன்ற கூட்டத் தொடரை இரண்டு முறை கூட்டி எந்த பிரச்சனையும் இல்லாமல் எடப்பாடி நடத்திக் காட்டினார். எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மத்திய அரசின் அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே எதிர்க்க ஆரம்பித்தார். முதன் முதலில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை ஏற்க முடியாது என்று பிரதமருக்கே எடப்பாடி கடிதம் எழுதினார். தொடர்ந்து ரேசன் பொருட்களை தொடர்ந்து மூன்று மாதம் வாங்காதவர்களின் ரேசன் கார்டுகள் ரத்து எனும் மத்திய அரசின் யோசனையை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. 

 மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் மனம் உவந்து ஏற்று வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அரசை வெளிப்படையாகவே எதிர்க்க என்ன காரணம் என்று புரியாமல் இருந்து வந்தது. இதற்கான பதில் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடியை சந்தித்த போது கிடைத்தது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதிசெய்யும் படி பா.ஜ.க மேலிடம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதனை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்துள்ளார். இதனால் தான் வருமான வரித்துறையை வைத்து மிரட்ட  ஆரம்பித்தது மத்திய அரசு.மிரட்டினால் எடப்பாடி பழனிசாமி பயந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக எடப்பாடி பழனிசாமியும் மறுபடியும் எதிர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ஏற்க முடியாது, தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறும் என்று தடலாடியாக அறிக்கை வெளியிட்டார் எடப்பாடி. மேலும் பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கும் மத்திய அரசின் முடிவையும் ஏற்க முடியாது என்று கடிதம் எழுதினார் முதலமைச்சர்.    
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது தான் மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக இது போன்ற அறிக்கைகளும் கடிதங்களும் வெளியாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அண்மைக்காலமாகத்தான் மத்திய அரசின் முடிவுகளை ஏற்க மறுத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது தற்போது தான் ஜெயலலிதா பாணி அரசியை எடப்பாடி கையில் எடுத்துள்ளார்.  இனியும் பா.ஜ.க குட்ட குட்ட குனிய முடியாது, எங்களால் பா.ஜ.க இல்லாமலும் அரசியல் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு சேதி சொல்லும் வகையில் எடப்பாடியின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும் மத்திய அரசால் அதிகபட்சமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும், அதனையும் பார்த்துவிடலாம் என்கிற முடிவுக்கு எடப்பாடி வந்துவிட்டதையே இது காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.