முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிக்காலம் போலவே அவரது குழந்தைப் பருவமும் மர்மங்களும் துயரங்களும் நிறைந்தது. 3 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி, பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டும் அதற்கான உண்மை இன்னும் வெளிவரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

தமிழத்தில் 6 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். 

இதனையடுத்து, ஜெயலலலிதா உயிரிழப்புக்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என பல்வேறு தரப்பில் பேசப்பட்டு வந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், போயஸ் கார்டன் வீட்டு பணியாளர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசாரிக்கப்பட்டனர். 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், 3-முறை நோட்டீஸ் அனுப்பியும் துணைமுதல்வர் ஓபிஎஸ் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை.

 

இதனிடையே, ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்பல்லோ மருத்துவமனை முயற்சிப்பதாக விசாரணை ஆணையம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சூழலில் விசாரணை ஆணையத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் ஆகியும், அவரது மர்ம மரணத்தில் இருக்கும் மர்மம் இன்னும் விலகவில்லை.