சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள்  முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை (27 -1-2021) புதன்கிழமை காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையேற்று திறந்துவைக்க உள்ளார்கள். 

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார் எனவும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். 

இந்நிலையில் நினைவிட பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரத்து 472 சதுர அடி பரப்பளவில் 57. 8 கோடி மதிப்பில்  நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, புல்வெளி உள்ளிட்டவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. 12 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியம் கட்டும் பணியும்  நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நினைவிடம் திறந்து வைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.