அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன ? என்கிற பிரத்யேக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதலமைச்சராக ஒபிஎஸ் 3 முறை பதவி வகித்துள்ளார். ஆனால் ஜெயலலிதா உயிரிழப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு துணை முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நிறைவு பெறுவதையொட்டி மீண்டும் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, துணை முதல்வர் ஒபிஎஸ் பேசுகையில், தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. ஆனால் உங்களை(ஈபிஎஸ்) முதல்வர் ஆக்கியது சசிகலா எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘’இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார். கொரோனா காலத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்’’எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.