ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டபோது ’தமிழகம் சந்தித்த ஆயிரத்தெட்டு கண் துடைப்பு கமிஷன்களில் இதுவும் ஒன்று!’ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் இந்த கமிஷன் விசாரணை நடத்தும் சில நபர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரங்கள்  ஜெயலலிதாவின் இறுதி நாட்கள் பற்றிய பகீர் உண்மையை சொல்கின்றன. அது அவரது உடல் நிலை பற்றியும், அவரது அரசியல் மூவ்கள் பற்றியுமாய் இருக்கின்றன.

அந்த வகையில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தாக்கல் செய்துள்ள வாக்குமூலம் வெளியே கசிந்திருக்கிறது. ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டிருந்தன! என்கிற பரபரப்புக்கு பதில் சொல்லும் விதமாகவும் அதில் உள்ள தகவல்கள்உள்ளன. அதைவிட பி.ஜே.பி.யை ஜெ., இறுதி வரை எதிர்த்தார் என்பதையும் அவை சொல்கின்றன. ராவின் வாக்குமூல வார்த்தைகள் இப்படியாக விரிகின்றன...

“அப்பல்லோவில் முதல்வர் இருந்தபோது காவிரி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது முதல்வரின் காலுக்கு நேராக இருந்த இருக்கையில் அமர்ந்துதான் நான் குறிப்புகள் எழுதினேன். ஜெயலலிதாவின் கால்கள் நன்றாக இருந்தன.” என்று சொல்லியிருக்கிறார்.

இதன் பிறகு அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தான் மிக முக்கியமானவை. அதாவது 2016 டிசம்பர் 3-ம் தேதியன்று கடைசியாக ஜெயலலிதாவை தான் பார்த்ததாக ராமமோகன் ராவ் கூறியுள்ளார். அதற்கு முன் தனி அறையில் ஜெ., அட்மிட் செய்யப்பட்டிருந்த போது சில நாட்கள் அந்த அறையின் கதைவை திறந்து வணக்கம்! சொல்வேன், அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதன் பிறகு மிக முக்கிய விஷயமொன்றை சொல்லியிருக்கும் ராவ் “2016 நவம்பர் இரண்டாவது வாரத்தில், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செய்ய வேண்டிய சில பணிகள் குறித்த குறிப்புகளை ஜெயலலிதா என்னிடம் தந்தார். அந்த குறிப்புகளை முக்கியமான ஒருவரிடம் கொடுத்து, அதன் படி செயல்படுமாறு அறிவுறுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த குறிப்புகள்...மத்திய அரசின் இரண்டு முக்கிய திட்டங்களுக்கு எதிரான மிக முக்கிய முடிவுகள்! என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதில் காவிரி விவகாரமும் ஒன்று! என்கிறார்கள். அதாவது தமிழகத்துக்கு சிக்கல் தரும் வகையில் மத்திய அரசு திட்டமிட்ட இரண்டு முக்கிய முடிவுகளை வன்மையாக நாடாளுமன்றத்தில் தனது உறுப்பினர்கள் எதிர்க்கும் படி அந்த குறிப்பில் உத்தரவிட்டிருந்தாராம் ஜெயலலிதா.

இந்த முக்கிய குறிப்பு பற்றிய தகவல்கள் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் இருப்பதால், ராவ் சொல்வது உண்மையே என்று பேசப்படுகிறது விசாரணை கமிஷனின் அளவில்.

இந்த தகவல்களை எடுத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள் “மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள்தான். திராவிடத்தை அடிப்படையாக கொண்ட கட்சியை நடத்தினாலும் கூட ஜெயலலிதா ஆன்மீகத்தை கடுமையாக நம்பினார். அந்த வகையில் மோடி அவருக்கு பெரிய நட்புக்கரம் நீட்டினார்.

ஆனாலும் தமிழக அரசு மற்றும் அரசியல் மூவ்களில் மோடி தலையிட ஒரு நாளும் ஜெயலலிதா அனுமதித்ததில்லை. சிம்ம சொப்பனமாய்தான் விளங்கினார் பி.ஜே.பி.க்கு. அந்த அடிப்படையில்தான் மரண கட்டிலில் இருந்த போதும் கூட தமிழக நலன் கருதி பி.ஜே.பி.க்கு எதிரான அரசியல் முடிவுகளை எடுத்திருக்கிறார், அதை தன் எம்.பி.க்கள் செய்ய வேண்டும் என கட்டளையும் இட்டிருக்கிறார்.

ஆனால் அவரது பெயரை சொல்லி இப்போது ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அதே பி.ஜே.பி.யின் கைப்பாவையாகி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் மடிந்து, சுயமரியாதையை இழந்து சுருண்டு கிடப்பது அவலம், அபத்தம்.

பி.ஜே.பி.யிடம் அதிகாரத்தை இவர்கள் அடகு வைத்திருப்பதென்பது, ஜெயலலிதாவுக்கு இவர்கள் செய்யும் பெரும் துரோகம்.” என்கிறார்கள்.