Jayalalitha Video TTV Dinakaran releases the truth tomorrow evening

மறைந்த ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ வெளியானது குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில், நாளை மாலை அதாவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் டிடிவி தினகரன் விளக்கம் அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுத்த வீடியோ என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலை வைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் கூறப்பட்டு வருகிறது.

இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா சென்னை, தி.நகரில், செய்தியாளர்களைச் சந்தித்தார். தற்போது வெளியாகி வீடியோ, முதலில் கொடுக்க சொன்னதே நாங்கள்தான் என்றார். நாங்கள் கூறும்போது அதனை வெளியிடாமல், இப்போது அதனை வெளியிடுவது கீழ்த்தரமான செயல் என்றார். டிடிவி தினகரனிடம் கொடுக்கப்பட்ட அந்த வீடியோ வெற்றிவேலிடம் ஏன் போக வேண்டும்? இது பெரிய கேள்வியாக உள்ளது. அதற்கான பதில் இனிமேல்தான் வெளியாகும் என்றார். வெற்றிவேல் துரோகம் இழைத்திருக்கிறார். 

விசாரணை கமிஷனுக்கு தேவைப்பட்டால் அளிப்பதற்காகவே இந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்தோம். ஆனால், இந்த விடியோவை இன்று வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். வீடியோவை வெளியிட்டது குறித்து தினகரனிடம் விளக்கம் கேட்பேன் என்று கிருஷ்ணப்பிரியா கூறியிருந்தார்.

வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டதை அடுத்து, அவர் மீது தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனால், இந்த வீடியோ வெளியானதுக்கும் தினகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அவர்களது அனுமதி இல்லாமல் தனது சுய உந்துதலாலேயே இந்த வீடியோவை வெளிட்டதாகவும் வெற்றிவேல் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வெளியானதற்கும், தினகரனுக்கும் தொடர்பில்லை என்று வெற்றிவேல் கூறும் நிலையில், வீடியோ வெளியானது குறித்து டிடிவி தினகரனிடம் விளக்கம் கேட்பேன் என்று கிருஷ்ணபிரியா கூறியுள்ளார். தினகரனிடம் கொடுத்த வீடியோ, எப்படி வெற்றிவேலிடம் சென்றது என்பது குறித்தும் கிருஷ்ணப்பிரியா செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஜெயலலிதா, படுக்கையில், ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த போது அவரது உடையைச் சரிசெய்யவில்லை ஏன்? ஜெயலலிதாவின் இடதுகையில் சில மாற்றங்கள் இருக்கின்றன. வீடியோவை ஆய்வுசெய்தால் அதைக் கண்டறியலாம் என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த வீடியோவை தடய அறிவிய்ல துறையினர் ஆய்வு செய்தால், இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம் என்றும் ஒரு சாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையமாக வைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தவுட, வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளிக்க உள்ளதாக, டிடிவி தினகரனின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டி ராஜா கூறியுள்ளார். 

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு, வீடியோ குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.