ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட 75 நாட்களில் செய்தி சேகரிக்கச் சென்ற மீடியா செய்தியாளர்களுக்கு சாப்பாட்டு செலவாக ரூ.48 லட்சத்து 43 ஆயிரம் செலவானதாக அப்பல்லோ மருத்துவமனை மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
   
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் படி நாளொன்றுக்கு உணவுக்காக மட்டும் ஒ1 லட்சத்து 56 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளாத அறிந்த மக்கள் சாப்பாட்டிற்கே இவ்வளவு செலவா? என அதிர்ச்சியடைந்தனர். உலகில் மிக காஸ்ட்லியான சிறந்த சைவ உணவகம் அப்பல்லோ என நெட்டிசன்கள் குறும்பு செய்து வந்தனர். மோசமான நிலையில் சிகிசை பெற்று வந்த ஜெயலலிதாவா 1.17 கோடி அளவிற்கு சாப்பிட்டார்? யார் யார் சாப்பிட்டதற்கு இந்த செலவு என கேள்வி எழுப்பினர்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட உணவுக்கான செலவு இல்லை என தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் உணவுக்காக செலவிடப்பட்ட பட்டியலை விரிவாக வெளியிட்டுள்ளது. அதில்,  மீடியாக்களுக்கு ரூ.48.43 லட்சம் செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் கூறும்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனி வளாகத்திற்குள்ளே மீடியாக்களை அனுமதிக்கவில்லை. மருத்துவமனைக்கு வெளியே ஷிப்ட் முறையில் பணியாற்றினோம். 75 நாட்களுமே அப்பல்லோ மருத்துவமனைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. எங்களுக்கு யாரும் உணவு தரவில்லை.

சொந்த பணத்தை செலவிட்டு அருகேயுள்ள ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டு வந்தோம். பல நாட்கள் உணவே கிடைக்காமல் பசியோடு இருந்திருக்கிறோம். அப்பல்லோ நிர்வாகம் பொய்யான கணக்கை வெளியிட்டுள்ளது’’ எனக் கூறுகின்றனர். உணவுக் கணக்கு மட்டுமல்ல. அப்பல்லோ வெளியிட்ட மற்ற கணக்குகளையும் நம்ப மறுகின்றனர் மக்கள்.