முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் உருண்டோடிவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல்வேறு வதந்திகள் தொடாந்து வந்ததையடுத்து அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கவர்னர் தரப்பிலிருந்து உடல்நிலை குறித்த நிலவரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டன.

சமீப நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக பேசி வருவதாகவும், உடல்நிலை நல்ல முறையில் முன்னேறி வருவதாகவும் மூத்த பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதி மற்றும் சிகிச்சை அளித்து வரும் சில டாக்டர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையுடன் கூடிய கடிதம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதால் அது மிகுந்த சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியது.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி தலைமையிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் அஃபிடாவிட் கடிதம் கொடுக்க வேண்டியது கட்டாயம்.

அந்தவகையில் கட்சியின் ஹைகமாண்ட் எனப்படும் கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ கையொப்பமிட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

ஆனால், அதிமுக சார்பில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வழங்கப்பட்ட வேட்பாளர் ஒப்புதல் கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜெயலலிதாவிடமிருந்து கைரேகையை பெற்றுகொண்ட சென்னை அரசு பொதுமருத்துவமனை டாக்டர் பி.பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும், எழுந்து உட்காருகிறார். நன்றாக பேசுகிறார். கை வழியாக மருந்துகள் செலுத்தப்படுவதால் கைகளில் வலி அதிகமாக உள்ளதால் அவரால் பேனாவைப் பிடித்து கையெழுத்துப் போட முடியவில்லை.

அதனால்தான் அவர் பெருவிரல் ரேகையை வைத்தார். அவர் நன்றாக இருக்கிறார் என்றும், நான் அவரிடம் பேசினேன். அவரும் என்னிடம் நன்றாக பேசினார். விரைவில் முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என டாக்டர்.பாலாஜி தெரிவித்தார்.