கடந்த 2004 ஆம் ஆண்டு அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அது முடிவுக்கும் வந்தது. கூட்டணியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வாஜ்பாயி அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். அதன் பிறகு அவர் மறையும் வரை பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டதே இல்லை. அந்த அளவுக்கு அவர் ஸ்ட்ராங்காக இருந்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் தயவு தாட்சண்யம் பாராமல் தூக்கி எறிந்து விடுவார். உதாரணமாக உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம், ஜிஎஸ்டி போன்றவற்றை பாஜக அரசு தமிழகத்துக்குள் கொண்டுவர முயற்சித்தபோது அதனை கடுமையாக எதிர்த்தார்.

கச்சத்தீவு, முல்லை பெரியார், காவிரி பிரச்சனை போன்ற மாநில உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, கெயில், மீத்தேன், நீட் தேர்வு போன்றவைகளாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் போது தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான நிலைபாட்டையே கொண்டிருந்தார் ஜெயலலிதா. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா ? இந்த லேடியா ? என பாஜகவுக்கு கடுமையாக சவால் விட்டார். கடந்த  15 ஆண்டுகளுக்கு முன்பு  சென்னை கடற்கரை சீரணி அரங்கில் முஸ்லீம்கள் வாழ்வுரிமை மாநாடு ஒன்று நடைபெற்றது. 

அதில் பங்கேற்றுப் பேசிய ஜெயலலிதா, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் பாஜக ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ளாது" என்றார். இப்படி சொன்னவாறே இறுதிவரை சாதித்தும் காட்டினார். 

ஆனால் அவர் மறைந்த பிறகு எல்லாம் தலைகீழாக மாறிப்போயின. நேற்று ஜெ, விருப்பத்துக்கு மாறாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது அதிமுக.

இதையடுத்து தற்போது ஜெயலலிதா பேசிய வீடியோ மற்றும் ஆடியோக்கள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போதுள்ள அதிமுக தலைவர்கள் அக்கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்களே என தொண்டர்கள் புலம்புகின்றனர்.