ஜெயலலிதாவின் புராணங்களை காலங்காலமாக பாடிக்கொண்டே இருக்கலாம். தன் லைஃப் ஸ்டைலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆச்சரியங்களால் நிறைத்த லேடி அவர். அதில் மிக முக்கியமானது, ஜெயலலிதாவின் பி.எஸ்.ஓ-க்கள் எனப்படும் பர்ஷனல் செக்யூரிட்டி ஆபீஸர்ஸ் பற்றிய தகவல்.

அதாவது வைணவ குலத்தை சேர்ந்தவரான ஜெயலலிதாவின் இஷ்ட மற்றும் முதன்மை தெய்வம் பெருமாள். தன்னை காப்பவரும், வழி நடத்துபவரும் அவரே என எண்ணினார். அதனால்தான் தனக்கு பாதுகாவல் அரண்களாக நிற்கும் பி.எஸ்.ஓ. போலீஸாரை பெருமாளின் அவதார பெயர் உடையவர்களாக பார்த்து நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதாவை சுற்றி நிற்கும் பி.எஸ்.ஓ.க்களின் பெயர்களை கவனித்தால்....பெருமாள் சாமி, வீரபெருமாள் என்று தான் இருக்கும். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்ப இவர்களும் ஒவ்வொரு நொடியும் தங்களின் உயிர்த்துடிப்பை, ஜெ.,வுக்காகவே அர்ப்பணித்துதான் வந்தனர். ஜெ., வெளியிடங்களுக்கு வரும்போதெல்லாம் அவரை மொய்க்கும் கேமெராக்களின் கண்களில் இவர்களும் விழுந்து, விழுந்து பெயர் தெரியாவிட்டாலும் கூட மக்களின் மனதில் மிக பரிச்சயமானார்கள். எப்படி கருணாநிதிக்கு பாண்டியன், விநோதகன் இருவருமோ அப்படி ஜெ.,வுக்கு இவர்கள். 

ஜெயலலிதாவின் பி.எஸ்.ஓ.க்களில் குறிப்பிடத்தக்கவர் பெருமாள்சாமி. ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக  கொண்டவர் இவர். நெடுங்காலமாக ஜெ.,விடம் பி.எஸ்.ஓ.வாக பணிபுரிந்தவர். அவரது கண்கூட அசைய வேண்டாம், இமை அசைவை கவனித்து, சேவைகளை மின்னல் நொடியில் செய்து முடிப்பார். காரில் இருந்து ஜெ., இறங்குகையில், ஏறுகையில், விழா மேடைக்கு ’தங்கத்தாரகையே வருக, வருக, வருக!’ என்ற  பாடல் ஒலிக்க வருகையில் இந்த பெருமாள்சாமி மற்றும் இன்னு இருவர் நகரும் அரண்களாக ஜெ.,வை பொத்திப் பாதுகாத்து அழைத்து வரும் காட்சியானது அ.தி.மு.க.வின் சரித்திரத்தில் உணர்ச்சி பிழம்பான காட்சிகள். 

ஜெயலலிதாவின் பி.எஸ்.ஓ.க்களில் பெருமாள்சாமி மற்றும் வீரபெருமாள் இருவரும் மிக முக்கியமானவராகவே கருதப்பட்டார்கள் அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களால். அதிலும் பெருமாள்சாமியை ஜெ., நிழல் என்றே வர்ணித்தார்கள். மற்ற பி.எஸ்.ஓ.க்களை விட இவர் மீது வீரபெருமாள் மீது அலாதி நம்பிக்கையை வைத்திருந்தார் ஜெ., அதிலும் சென்னை கோட்டையிலுள்ள அம்மன் கோயிலுக்கு திடீரென சென்று சாமி கும்பிட்ட ஜெ., தீப ஆராதனை தட்டில் வைக்க தன் ஹேண்ட் பேக்கில் பணமில்லாத நிலையில், வீரபெருமாளிடம் ஐநூறு ரூபாய் ‘கடன்’வாங்கி வைக்குமளவுக்கு உரிமையாக இருந்தார். 

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் பெருமாள்சாமி, வீரபெருமாள் உள்ளிட்டோர் மனம் வெம்பித்தான் போயிருந்தனர். வேறு எந்த டூட்டியிலும் அவர்களின் மனம் லயிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடியார் அரசுமுறை பயணம் சென்றுள்ள நிலையில், அவரது பர்ஷனல் செக்யூரிட்டி ஆபீஸராக பெருமாள்சாமி இருப்பதை பாத்து பலருக்கு ஷாக், பலருக்கு பிரமிப்பு, பலருக்கு ஆச்சரியம். 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் காணாமல் போன அவரது நிழல் இப்போது எடப்பாடியாரின் பாக்கெட்டில் இருக்கிறது. 

ஆம் பெருமாள்சாமி உள்ளிட்ட ஜெ.,வின் பி.எஸ்.ஓ.க்களை குறிப்பாய் கேட்டு தன் பாதுகாப்புக்க்கு நிறுத்தியிருக்கிறாராம் எடப்பாடியார். 
கடைசியில துர்கா சந்திரமுகியாவே ஆனதை பார்! பார்!