மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க அரசு முயற்சித்ததில் நீதிமன்றம் வரை சென்ற விவகாரத்திற்கு பின் பல சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெட்டவெளிச்சமாகின.   

16 கோடி வருமான வரி கட்டாமல் இருப்பதால் ஜெயலலிதாவின் 4 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. அதுவும் ஜெயலலிதா நலமாக இருந்த 2007ம் ஆண்டிலிருந்தே முடக்கப்பட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 16 கோடி ரூபாயை ஜெயலலிதா கட்டாமல் இருந்திருப்பாரா? என சந்தேகம் கிளம்பியது. 

இதுகுறித்து பல பின்னணித் தகவல்கள் வெளியாகி வருகிறது. வருமான வரி, அமலாக்கத்துறை உள்பட முக்கியத் துறைகளில் இருந்து போயஸ் தோட்டத்துக்கு ஜெயலலிதாவுக்கு வந்த முக்கிய கடிதங்களை சசிகலா மறைத்து விட்டதால் இந்த நிலை உருவானதாக கூறுகிறார்கள் ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள். ’’முதல்வர், கட்சி தலைவர் என்ற வகையில் ஜெயலலிதா பல கடிதங்கள் வரும். 100 கடிதம் வந்தால் அதில் 10க்கும் குறைவான கடிதங்களே முக்கியமானதாக இருக்கும். மற்ற கடிதங்கள் நிர்வாகிகள் மீது புகார், உதவி கேட்டு வருபவை.

 அதையெல்லாம் கழித்து விட்டு ஜெயலலிதாவின் பார்வைக்கு சில கடிதங்கள் மட்டுமே கொடுப்பது வழக்கம். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சசிகலா அமைச்சர்கள், நிர்வாகிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வரும் முக்கியமான புகார்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பாமல் மறைத்துவிட்டு முக்கியமில்லாத கடிதங்களை மட்டும் அவர் பார்வைக்கு வைப்பார். அதுபோன்றுதான் வருமானவரி உள்பட பல வரிகளை கட்டாத விஷயமும் நடந்து இருக்கலாம். 

ஜெயலலிதா தரப்பில் பணம் கொடுத்து இருந்தாலும் அதை அப்படியே சுருட்டிக் கொண்டு வருமான வரி கட்டாமல் விட்டு இருக்கிறார்கள். இதை ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் விட்டு இருக்கிறார்கள். அது இப்போது விஸ்வரூபமாகி அவர் இறந்த பின்னும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்கிறார்கள்.