கடந்த கால் நூற்றாண்டாக  தமிழக அரசியலின் தலைப்புச் செய்தியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இருந்தார்கள். கருணாநிதி ஐந்து முறையும், ஜெயலலிதா ஆறு முறையும் தமிழக முதல்வராக இருந்து ஆட்சி செய்திருக்கிறார்கள்.

2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் முறையாக தொடர்ச்சியாக வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு 75 நாட்கள் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்தார்.

அதே நேரத்தில் வயது மூப்பு காரணமாக சிறிது சிறிதாக நினைவுகளை இழந்து வந்த கருணாநிதி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர்  உயிரிழந்தார்.

தமிழகத்தின் முதல்வர்களாக இருந்த அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரது உடல்களும் சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலும், எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதா உடலும் புதைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டு இருக்கிறது.

கருணாநிதியின் சமாதி தினமும் பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நாட்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இந்த மலர் அலங்காரங்களை பார்ப்பதற்கே தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அதிலும் வார இறுதி நாட்களில் அதிகளவில் மக்கள் திரள்கிறார்கள். திமுக சார்பாக செய்யப்படும் இந்த மலர் அலங்காரத்துக்கான செலவுகளை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், எம்.எல்.ஏ சேகர்பாபு, அலங்கார ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி சமாதி களைகட்டிக்கொண்டிருக்க ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணிகள் நடப்பதால் எந்த வித மலர் அலங்காரங்களும் இன்றி வெறுமனையாக காட்சி அளிக்கிறது. ஜெயலலிதாவிற்கான நினைவிட பணிகள் தீவிரமாக நடந்தாலும் கருணாநிதி சமாதி போல ஏன் தினமும் மலர் அலங்காரங்கள் செய்ய கூடாது என்று குமுறுகின்றனர் அதிமுக தொண்டர்கள். தினமும் தலைமை செயலகத்துக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்த வழியாக தான் செல்கின்றனர். அவர்கள் தினமும் வந்து சென்றாலே மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் அதிமுகவினர்.

ஜெயலலிதாவால் நடக்கும் அதிமுக ஆட்சியின் போதே இந்த நிலைமை என்றால் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டால் எப்படி இருக்கும் என்பதே அதிமுகவினரின் கேள்வியாக இருக்கிறது.

தற்போது நினைவிட கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதால் முக்கிய நபர்கள் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.