மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டத் தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் ஜெயலலிதாவுக்கு நினைவிட அமைக்க தடை கோரி வழக்குத் தொடர்ந்தார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாக திகழும். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்தால் கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாக அமையும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு வழக்கறிஞர், ’’சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்ற காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன. இதனால் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்பதால் அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பதில் அளித்த மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்ற கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறியது. 

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், ’’சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுக்கப்பட்டார். ஆகையால் ஜெயலலிதாவை குற்றவாளி எனக் கருத முடியாது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிக்கு உட்பட்டே நினைவிடம் அமைக்கப்படுகிறது’’ என வாதாடினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டத்தடை இல்லை.

பள்ளி, கல்லூரி, நினைவு மண்டபம் அமைப்பதே மறைந்த தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை. தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. அதில், நீதிமன்றம் தலையிடாது’’  என தீர்ப்பளித்து எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.