முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த போது அவரது உடல் கெட்டுப் போகாமல் இருக்கும் வகையில் அப்பல்லோ மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டதைப் போன்று மறைந்த கருணாநிதியின் உடலுக்கும் இன்று எம்பாமிங் செய்யப்பட்டுளது. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  5ம் தேதி இரவு 11. 30 மணிக்கு இறந்தார்.
 
ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது அவரது கன்னத்தின் தாடை பகுதியில் நான்கு துளைகள் இருந்தன.. இது எம்பாமிங் முறையில் உடலை பாதுகாக்க போடப்பட்ட துளை என மருத்துவர்கள் தெரிவித்தனர். எம்பாமிங்’ முறை என்பது கன்னத்தில் நான்கு துளைகள் போட்டு கருவிகள் மூலம் குறைந்த அழுத்தத்தில் ரத்தம் நீக்கப்பட்டு உடலில் அதே சிறு துளை மூலமாக பால்மால்டிஹைடு கலந்த திரவம் நிரப்பப்படுகிறது.

இது, உடலை உயர் குளிர்நிலையில் வைத்து பாதுகாக்க பயன்படும்.  ஜெயலலிதா இறந்தவுடன் இது போன்று எம்பாமிங் செய்து உடல் பதப்படுத்தப்பட்டது.  இதே போன்று இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மருத்தவர்கள் அவரது உடலுக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எம்பாமிங் செய்தனர். இதன் பிறகு தான் கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.