ராஜரகசியமாக வாழ்ந்து வந்த ஜெயலலிதாவின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் உடனிருந்த பெண்மணிகளில் முக்கியமானவர் ராஜம்மாள். ஜெ.,வின் இஷ்ட சமையல் பெண். தோற்றத்தில் ‘அம்மா’வின் அம்மா வழி பெண்மணி போன்றே இருப்பார்! ஜெ., வம்சாவழிகளின் லட்சணங்களில் ஒன்றான வட்ட வடிவ முகம், தீர்க்கமான தோற்றம்! என்று இருந்ததாலோ என்னவோ இந்த பெண்மணியை அநியாயத்துக்கு பிடித்துப் போனது ஜெ.,வுக்கு. 

ஜெயலலிதாவுக்கு நெடுங்காலமாக வழங்கப்பட்ட உணவு முறைகள், அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்ட நாள் நடந்த சம்பவங்கள்...என அனைத்தும் ராஜம்மாளுக்கு தெரியும் என்பதால் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் இவரையும் ஒரு சாட்சியாக சேர்த்து அவ்வப்போது விசாரித்து வருகிறது.

  

இந்நிலையில்  ஜெ., மரணத்துக்குப் பின் ஓ.பன்னீர்ல்செல்வம் தான் ராஜம்மாளை தனது பராமரிப்பில் வைத்து, அவருக்கான செலவுகள் செய்து கண்காணித்து வருகிறார். விசாரணை கமிஷனின் போக்கு வீரியமாகியிருக்கும் நிலையில் ராஜம்மாளை தங்களது டீமில் இழுத்து இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி டீம் ஒருபுறமும், சசிகலா டீம் மறுபுறமும் பெரும் முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கடும் கண்காணிப்பைப் போட்டு ஓ.பி.எஸ். பாதுகாத்து வருகிறார். 

இந்த விபரங்களை சமீபத்தில் ஏஸியாநெட் தமிழ் இணையதளம் விரிவாக எழுதியிருந்தது. இச்சூழலில், முதல்வர் நம்பர் -1 தரப்பிலிருந்து ஒரு தூதுவர் சமீபத்தில் ராஜம்மாளை சந்தித்தாராம். அவரது உடல் நலன், மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை ஹைடெக் நிலையில் கவனித்துக் கொள்வதாக சொன்னதோடு, புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்ல நாட்களை முன்னிட்டு பெரிய அளவில் பண முடிப்பு ஒன்றையும் பரிசாய் வழங்கினாராம். ராஜம்மாள் எவ்வளவோ மறுத்தும் கூட அவரது கைகளில் வைத்து திணித்துவிட்டு சென்றாராம். 

ராஜம்மாள் தங்கியிருக்கும் வீட்டின் மேஜையில் பிங்க் கலர் நோட்டுக் கட்டுக்கள் ராஜம்மாளை பார்த்து புன்னகைக்கின்றனவாம். ஆனால் ஜெயலலிதாவின் நிழலில் இருந்த காலத்தில் செவாக்கு மற்றும் ராஜ வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த ராஜம்மாளுக்கு இதெல்லாம் ஒரு சர்ப்பரைஸா என்ன?