மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இபிஎஸ், ஓபிஎஸ் கைகளைப்பிடித்து இருவரையும் கைகுலுக்கச்செய்யுமாறு அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள  போஸ்டர்களால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு, இபிஎஸ் ஓபிஎஸ்  அணிகள் தனித்தனியாக சென்று ஒருபக்கம் கூவத்தூரிலும் மற்றொரு பக்கம் கிரீன்வேஸ் சாலை தென்பெண்னையிலும் நடத்திய கூத்துக்க்கள் கும்மாளங்கள் நாடே அறியும். பின்னர் சில சுய காரணங்களுக்காகவும் சில அழுத்தங்களுக்காகவும் ஓபிஎஸ்சும்,இபிஎஸ்சும் கைகோர்த்துக்கொண்டனர்.

சுமார் ஒருவருடம் வரை நன்றாக ஓடிய ஓட்டத்தில் தற்போது சிறு சிறு சர்ச்சைகள் உள்ளுக்குள்ளே வெடித்துவருகின்றன, டிடிவியை சந்தித்த சர்ச்சை, கட்சிப் பதவிகளை ஆதரவாளர்களுக்கு பெருவதில் சர்ச்சை, அரசு விழா போஸ்டர்களில் படம் இடம்பெறுவதில் மனஸ்தாபம்,  தேனி மாவட்டத்தில்  எடப்பாடியார் பேரவை,ஓபி எஸை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமன் என இன்னும் பல சர்ச்சைகள் சங்கடங்கள் மன வருத்தங்கள் என ஓபிஎஸ், இபிஎஸ்  இடையே பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்பாக உள்ளுக்குள்ளேயே வெடித்துக்கொண்டிருக்கின்றன. 

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதானோ என்னவோ முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியை தலைமையாகக்கொண்ட அதிமுக இலக்கிய அணி சார்பில் ஓ.பிஎஸ், இபிஎஸ் கைகளை ஜெயலலிதாவே பிடித்து கைகொடுக்க வைப்பது போல் சித்தரித்து போஸ்டர்கள் வைத்துள்ளனர். கட்சியின் நலனுக்காக இப்படி போஸ்டர் வைத்தாலும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் இந்த போஸ்டர்களைக் கண்டு முகம் சுழிக்கின்றனராம்.

 காரணம் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஓபிஎஸ் முதல் ஒன்றியச்செயலாளர்கள் வரை யாராக இருந்தாலும் இண்டர்காமில் மட்டுமே பேசுவார். மிக மிக அவசரத்தேவை அல்லது முக்கிய மீட்டிங் என்றால் மட்டுமே நால்வர் அணி, அல்லது ஐவர் அணியை நேரில் அழைத்துப்பேசுவார். அதுவும் நான்கிலிருந்து ஐந்தடி வரை தள்ளித்தான் நிற்கவேண்டும் அல்லது அமரவேண்டும். 

சினிமா துறையை விட்டுவிட்டபிறகு ஜெயலலிதா அந்த அளவிற்கு ஆண்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் இடைவெளியை மெயிண்டெயின் செய்துவந்தார். இது ஜெயலலிதாவையும் போயஸ்கார்டனையும் நன்கு அறிந்தவர்களுக்கு தெரிந்த ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் இந்த போஸ்டரை ஓபிஎஸ்,இபிஎஸ் போன்ற்வர்களே ஏற்பார்களா என்பது கூட  தெரியவில்லை. நிலைமை இவ்வாறிருக்க ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்த பா.வளர்மதியின் இலக்கிய அணியினர் மேற்படி போஸ்டர்களை அடித்து ஒட்டியிருப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.