முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு காரணம், சசிகலா குடும்பத்தினர்தான் என்று மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டடம், பரமத்தி வேலூரை அடுதத, ஜேடர்பாளையத்தில் அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் தங்கமணி பங்கேற்றுப் பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்றும், ஜெயலலிதாவுக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: டிடிவி தினகரன், 10 ஆண்டுகளாக கட்சியில் இருந்து ஜெயலலிதா எதற்காக நீக்கினார். அப்போலோ 
மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களில் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பார்த்தால் தொற்றுநோய் வந்துவிடும்... வேண்டாம் என்றால் நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம். 

அம்மா அவர்கள் நன்றாக இருந்தாலே போதும். சட்டமன்றத்தில் டிடிவி தினகரனிடம், அம்மா அவர்கள் எதற்காக உங்களை விலக்கி வைத்தார்கள் என்றதற்கு, அதைப்பற்றி பேசாமல், சின்னம்மா என்னை துணை பொது செயலாளராக நியமித்தார்கள். அதனை நீங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர்கள் என்றார். எங்களை எல்லாம் கேட்டா பிறகா உங்களை துணை பொது செயலாளராக அறிவித்தார்கள்? டிடிவியிடம் நான் கேள்வி கேட்ட பிறகு, அவர் சட்டமன்றத்துக்கே வருவதில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.